திருப்பூர், செப்.18-
பொங்கலூர் அருகே மாதப்பூர் தலித் மக்கள் பயன்படுத்தி வரும் இடுகாட்டை தனியார் ஒருவர் வழித்தடத்துடன் ஆக்கிரமிப்புச் செய்ய முயற்சி மேற்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில் பல்லடம் மாதப்பூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாதப்பூர் காலனி மக்கள் தலைமுறை, தலைமுறையாக குடியிருப்புக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை உரிய ஒப்புதலுடன் இடுகாடாக பயன்படுத்தி வந்தோம்.

தற்போது அருகில் உள்ள தனியார் தோட்ட உரிமையாளர் இடுகாட்டுக்கான நிலத்தையும், வழித்தடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். இதனால் எங்களின் உரிமை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி, எங்களின் நீண்டநாள் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றனர். குடிநீர் கோரி மனுஅலகுமலை ஊராட்சி கிறிஸ்தவர் காலனி மக்கள் காலிக்குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் கடந்த 3 மாத காலமாக குடிநீர் வருவதில்லை. இது குறித்து பொங்கலூர் ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இரண்டு வாரங்களுக்கு ரூ. 750 விலை கொடுத்து நீரை வாங்கி பயன்படுத்துகிறோம். தற்போது போதிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதிய வசதி செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பூங்கா, நூலகம் அமைத்திடுக:
பல்லடம் நகராட்சி 10, 11 மற்றும் 12-ஆம் வார்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில்: வடுகபாளையம், கொசவம்பாளையம் பகுதியில் 200 குடும்பங்களுடன் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைப் பிரிவில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் அடிப்படை வசதி கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைக்காக வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில், நீண்டநாள் கோரிக்கையான பூங்கா மற்றும் நூலகம் அமைத்துத்தர வேண்டும் என்றனர்.

குளக்கரையை பலப்படுத்த கோரிக்கை:
அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் வேலுச்சாமி மற்றும் தொரவலூர் சம்பத் ஆகியோர் அளித்த மனுவில்: அவிநாசி மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்து வரும் கனமழையால் நீர் நிரம்பியுள்ள சங்கமாங்குளம், தாமரைக்குளம் மற்றும் நல்லாறு நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை சேமித்தும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். சாலையப்பாளையத்தில் உள்ள குளத்தில் கற்களையும், மண்ணையும் கொட்டி தற்காலிகமாக நல்லாற்று நீர்வழித்தடத்தில் நீரை திசை திருப்பியுள்ளனர். அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.