சேலம், செப்.18-
பிஏசிஎல் நிறுவன முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை காலதாமதம் இன்றி வழங்க வலியுறுத்தி திங்களன்று சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை தலைமை இடமாகக்கொண்டு மத்திய அரசின் அங்கீகாரத்தோடு செயல்பட்டு வந்த நிறுவனம் பிஏசிஎல். இந்த நிறுவனத்தில் ஆறு கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் சிபிஐ மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் பிஏசிஎல் நிறுவனத்தை முடக்கி வைத்துள்ளது.

இதனால் பணத்தை செலுத்திய மக்கள் சேமிப்பின் காலக்கெடு முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் பணம் திரும்ப கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வேலை வாய்ப்பு இல்லாத பல இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் முகவர்களாக செயல்பட்டு அதிகமானோரிடம் பணம் வசூலித்து கொடுத்தனர். ஆனால், நிறுவனம் மூடக்கப்பட்டுள்ளதால் பணத்தை முகவர்களிடம் கட்டியவர்கள், திரும்ப கேட்டு நிர்பந்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முகவர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக, தரக்கட்டுப்பாட்டு வாரியம் 90 நாட்களுக்குள் பணத்தை திரும்பித்தர உத்திரவிட்டு மூன்று ஆண்டு கடந்தும் பணத்தை திருப்பிதராமல் இருப்பது பணத்தை கட்டியவர்களிடம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தங்களின் வாழ்வாதாரத்திற்காக சேர்க்கப்பட்ட பணத்தை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு திரும்ப பெற்றுத்தர வேண்டும் எனவும், நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையின் படி பிஏசிஎல் சோத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையின் இன்று  வரை முதிர்வு தொகை வழங்கப்படவில்லை. ஆகவே, இந்த தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி சிஐடியு பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஏ.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார் போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், இப்போராட்டத்தில் கே.சிவானந்தம், செல்வராஜ், கோமதிமுருகேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக, சிஐடியு மாவட்ட தலைவர் பி,பன்னீர் செல்வம் போராட்டத்தை முடித்து வைத்தார்.

ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு களப்பணியாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரகுராமன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் உட்
பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு பிஎஸ்சிஎல் களப்பணியாளர் சங்க தலைவர் பி.சதாசிவம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஏ.சிங்காரம் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பிஎசிஎல் களப்பணியாளர் சங்க மாநில உதவி தலைவர் என்.ஜோதி, சிஐடியு உதவித்தலைவர் கு.சிவராஜ் உட்பட சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், சிஐடியு மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: