கோவை, செப்.18-
மாவட்ட ஆட்சியர் வழங்கிய பட்டா உள்ளது, ஆனால் இடத்தை காணோம் எனக் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. மாற்றுத்திறனாளி இவருக்கு கடந்த 2013ல் அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார். பட்டாவிற்கு உரிய இடம் பெரியநாயக்கன்பாளையத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது பட்டாவிற்குரிய இடம் அங்கு இல்லை என அப்பகுதியை சேர்ந்த கிராம அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது நிலையை கருத்தில் கொண்டு, எனக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவிற்கு மாற்றாக தற்போது பசுமை வீடுகள் திட்டம் அல்லது குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனது மனைவியுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதேபோல், கோவை ஆர்எஸ்புரம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாரியம்மாள் அளித்தமனுவில், கடந்த 18 ஆண்டுகளாக அரசு உதவி மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டுவிண்ணப்பித்தும் இதுவரை எந்தவித உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பெட்டிக்கடை வைக்கவும், இலவச வீட்டுமனை பட்ட வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.