ஈரோடு, செப்.18-
தேங்காய் நார் தொழிற்சாலையால் நிலத்தடி நீரும், குடிநீரும் மாசுபட்டு விஷமாவதாக கூறி கரட்டுப்பாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் முகாமில், சென்னிமலை, பாலத் தொழுவு பஞ்சாயத்து கரட்டுப்பாளையம் கிராம மக்கள், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது, கரட்டுப்பாளையம் பகுதியில் நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் அரசின் உரிய விதிகள் பின்பற்றப்படுவதில்லை.

குறிப்பாக, மட்டை, நார் கழிவு நீரை அப்படியே வெளியேற்றுவதால், சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிணற்றிலும், சாக்கடை நீர்போல் குடிப்பதற்கு பயனற்ற நீராக, விஷம் போல் மாறிவிட்டது. அதுவும் ஊருக்கான பொது குடிநீர் ஏற்று இடத்திலும், குடிப்பதற்கு அற்ற நீராக மாறிவிட்டதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே, இந்த நார் தொழிற்சாலையை முறையாக ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதிக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். கழிவு நீரைவெளியேற்றி, குடிநீர் கெட்டுப் போனது தொடர்பாக, ஆலை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: