கோவை, செப். 18-
கோவை மாநகராட்சியின் புதிய வரி விதிப்பினை கண்டித்து திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் புதிதாக குப்பை வரி மற்றும் குடிநீர் டெபாசிட் கூடுதல் கட்டணம் விதிப்பு போன்றவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகளை கண்டித்து திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஓருபகுதியாக அனைத்து கட்சிகள் சார்பில் திங்களன்று கோவை மாநகராட்சி முழுவதும் 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை மாநகராட்சி பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள புதிய அநியாய வரிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சின்னவேடம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: