திருப்பூர், செப்.18-
பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்டுவரும் மதுபானக் கடைக்கு பூட்டு போடுவதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெண்கள் அணிதிரண்டனர். கொடுவாய் பொள்ளாச்சி சாலையில் டாஸ்மாக் கடை எண் 1938 அமைந்துள்ளது. இக்கடை அமைந்திருக்கும் பகுதி மக்கள் குடியிருப்பாக இருப்பதுடன், பெண்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும், மக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே இக்கடையை அகற்றுமாறு ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். எனினும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் மேற்படி மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி திங்களன்று டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்துவதாக ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்தது. அதன்படி மாதர் சங்கத்தின் ஒன்றியத் துணைத் தலைவர்கள் வள்ளி, மீனா, ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதேவி மற்றும் மாவட்டச் செயலாளர் பவித்ராதேவி ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள் அப்பகுதியில் திரண்டனர். இப்போராட்ட அறிவிப்பையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்தில் மாதர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இந்த மதுபானக் கடையினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கும்படியும், அதன் அடிப்படையில் இக்கடையை மூடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக காவல் துறையினர் மாதர் சங்க நிர்வாகிகளிடம் கூறினர். இதையடுத்து செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது என்றும், அதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் பெண்களைத் திரட்டி அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கையை மேற்கொள்வதென்றும் முடிவு செய்திருப்பதாக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ராதேவி கூறினார். இதன் அடிப்படையில் போராட்டம் நிறைவு பெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.