“ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா…
மாலை முழுவதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா”

என்று மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு இணங்க, மாலைப் பொழுதில் ஊரின் பொது மரத்தில் பறவைகள் ஒன்று கூடி ஆரவார ஒலி எழுப்பதுபோன்று இளம் பருவத்தினர் கூடி ஓடுதல், தாவுதல், குதித்தல், தாண்டுதல் என ஆர்ப்பரித்து விளையாடிய காட்சிகள் அனைத்தும் இன்று கண்முன் காட்சியளிக்கிறது. கிராமப்புறமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் எப்போதுமே ஒரே விளையாட்டை விளையாடுவதில்லை. அது பருவ காலத்திற்கு ஏற்றவாறு மாறும். கண்ணாமூச்சி, குலை குலையா முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணீ ஊத்தி, நொண்டி, கல்லா மண்ணா போன்ற விளையாட்டுகளில் ஆண், பெண் குழந்தைகள் இருவரும் சேர்ந்தும் தனித் தனியாகவும் அன்று விளையாடியதை இன்றளவும் மறக்க முடியவில்லை.

ஒரு காலக் கட்டத்தில் கபடி, கோலி குண்டு, திருடன்-போலீஸ் என்றால், மறு காலக் கட்டத்தில் பம்பரம், கிட்டிப்புள், பட்டம் விடுவது, நீச்சல் அடிப்பது என ஒவ்வொரு காலக் கட்டத்திற்கும் தயார்ப்படுத்திக் கொண்டதும் மறக்க முடியாத நினைவலைகளாகும். பல நூற்றாண்டுகளாக தமிழக மக்களால், விளையாடப்பட்டு வரும் பாரம்பரியமிக்க விளையாட்டுக்களான சிலம்பம், உறியடி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம், கில்லி, பல்லாங்குழி, நொண்டி, பம்பரம், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகள் நவீன விளையாட்டுகளால் மறைந்து வருகின்றன. இதை ஊக்கப்படுத்த வேண்டும் என தமிழக விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜனும் சட்டமன்றத்திலேயே கூறியது குறிப்பிடத் தக்கதாகும்.

இத்தகைய விளையாட்டுக்களில் எவ்வித கவலையும் இல்லாமல் வியர்க்க வியர்க்க ஓடியாடி விளையாட ஏற்ற பருவம் குழந்தைப் பருவமாகும். அந்தப் பருவம்தான் சாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை வளர்க்கும் நல்லுறவுக்கு அடித்தளமிட்டது. வெற்றி, தோல்விகளை சமமாக பார்க்கும் மன நிலையையும் ஏற்படுத்தியது. இக்கட்டான நிலைமைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கற்றுத்தந்தது. என்னதான் மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடினாலும் அவை கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்களுக்கு இணையாவதில்லை.  அதைப் பற்றி சற்று அலசுவோம்:-

பம்பரம் – ஒரு வட்டத்தைச் சுற்றி நின்று கொண்டு பம்பரத்தை சாட்டையால் சுழலவிடவேண்டும். அந்த பம்பரம் சுழன்றுகொண்டு இருக்கும் போதே சாட்டையால் பம்பரக் கட்டையை மேலே எடுத்து உள்ளங்கைக்குள் சுழலவிடுவதும், வட்டத்திற்குள் சுழலும் பம்பரத்தின் மீது மற்றொரு பம்பரத்தை சாட்டையைக்கொண்டு ஓங்கி அடித்து வெளியில் எடுத்து விளையாடியதும் நீங்காத நினைவுகளாகும்.

கிட்டிப்புள் – கிட்டிப்புள் விளையாட்டு கில்லி, கிட்டிதாக்கா, குச்சிக்கம்பு, குச்சி அடித்தல், சிங்காங்குச்சி, செல்லாங்குச்சி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கிட்டி புள்காக காசு, பணம் செலவழிக்க வேண்டியதில்லை. மரக்கிளைகளில் இருந்து வெட்டப்படும் குச்சிகளே போதுமானவை. ஏக்கர் கணக்கில் மைதானமும் தேவையில்லை. மண் தரையில் சிறிய குழியைத் தோண்டி அதன் மீது புள் குச்சியை வைத்து ஆடமுடியும்!

நொண்டி – பண்டைய விளையாட்டுகளில் ஒன்று தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நொண்டி. ஆண்களும்-பெண்களுமாய் குழு அமைத்து இரண்டு அணிகளாக ஒற்றைக் காலால் நொண்டியடித்து ஆடும் ஆட்டம் இது. எத்தனைபேர் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். ஓடுபவர்களை, நொண்டி அடித்தபடி சென்று தொட வேண்டும். தொடுபட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். நொண்டியடித்து செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் (காலை வைத்து) போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுள் நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர மற்றப் பகுதிகளில் காலை ஊன்றக் கூடாது. மாலைப் பொழுதில் துவங்கி இரவு சாப்பாட்டுக்கு செல்லும் வரையிலும் ஆட்டம் தொடரும் அந்த அளவுக்கு சுவையானது.

ஆடு-புலி – இது மதிநுட்ப விளையாட்டாகும். சாதாரணமாக கைகளை நகர்த்தி எளிதில் விளையாடக்கூடிய விளையாட்டில்லை இது. கூர்மையான சிந்தனை தேவை. நன்கு யோசித்து விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். தமிழகத்தில் மட்டுமின்றி, தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில், தரையில் கீறப்படும் கட்டங்களே பிரதானம். அதில் சிறு கற்கள் அல்லது புளியங்கொட்டை ஆகியவற்றைக் கொண்டும் ஆடுவார்கள்.

வீடியோ கேம்களின் ஆதிக்கம்…
பல்லாங்குழிகளை பிடித்த கைகளும், ஓடியாடி விளையாடிய சிறுவர்களையும் ஓரிடத்தில் கட்டிப் போட்ட பெருமை வீடியோ கேம்களையே சாரும். ஆரம்பத்தில் பொழுது போக்காக இருந்த இந்த கேம்கள் காலப் போக்கில் முழு நேர தொழிலாகிவிட்டது. ஸ்பைடர் மேன், கார், பைக் ரேஸிங்சில் வரும் வன்முறை, ஆபாசம் நிறைந்த கேம்களை விளையாடுகிறார்கள். உலகைப்பற்றிய புரிதல் இல்லாமல் வளர்கிறார்கள். தாங்கள் ஆசைப்படுவதை முரட்டுத்தனமாகவும், வன்முறை மூலமாகவும் அடைந்துவிடலாம் என்றும் இதற்கு கேம்களில் வரும் குற்றவாளிகளை ரோல்மாடலாக எடுத்துக்கொள்வதால் தன்னம்பிக்கை, தனிமை, வெறுமை, குற்ற உணர்ச்சிகளை எதிர்கொள்ள முடிவதில்லை.

நவீன யுகத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் உலகை சுருக்கிவிட்டன. இதனால், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கணினி, செல்போன் போன்ற சாதனங்கள் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. 80க்கு பிறகு பிறந்த தலைமுறையினரை வெகுவாக ஆட்கொண்டுவிட்டது.செல்போன், கணினி கேம்களை எளிதாகவும் வேகவேகமாகவும் கையாளுகிறார்கள். அதுவரவேற்கத் தக்கவைதான். ரசிப்பதோடு கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படுகிறது.  ஒரு கையில் பொட்டலத்தில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத் தீனியும் மறு கையில் செல்போனும் வைத்துக் கொண்டு விளையாடு வதினால் உடல் ஆரோக்கியம் குறைந்து சோர்வுதான் அதிகரிக்கும். அதற்காக செல்போன், கணினிகளை வாங்கிக்கொடுக்கக் கூடாது என்பதோ, அதில் வரும் விளையாட்டுகளை விளையாடக்கூடாது என்பதோ அல்ல. பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செஸ், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்று படைப்புத்திறனை மேம்படுத்தும் வழிமுறைகளையும், பண்டைய விளையாட்டுகளில் மற்றவர்களுடன் கூடி ஓடியாடி விளையாடுவதிலும் ஆர்வத்தை செலுத்த உந்து சக்திகளாக பெற்றோர் மாறவேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு உண்மையான மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் மன நிறைவும் கொடுக்கும். இது பெற்றோரின்கையில்தான் உள்ளது. இல்லாவிடில், விளையாட்டு விபரீதமாகும்.

Leave A Reply

%d bloggers like this: