82 வயதாகியும் பேராசிரியர் சி.வி.சந்திரசேகர் நாட்டியம் ஆடுவதிலிருந்து எதுவும் தடுக்கவில்லை. தற்காலத்தில் நாம் பெற்றுள்ள ஆண் நாட்டியக்காரர்களில் மிகவும் பிரபலமானவர் என்று சொன்னபோது அவர் பக்குவமாக மறுப்புத் தெரிவிக்கிறார். “என்னை ஆண் நாட்டியக்காரர் என்று சொல்லாதீர்கள், மனித நாட்டியக்காரர்கள்” என்று குறிப்பிடுவதையே நான் விரும்புகிறேன். அதுதான் எங்களுக்கு கவுரவத்தை அளிக்கும். பலரும் பரதநாட்டியம் கற்றுக் கொள்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் சிலர் அதனைப் பணம் பண்ணும் தொழிலாக்க விரும்புவது எனக்குப்பிடிக்கவில்லை. நாட்டியத்தில் பாலினப்பாகுபாடு கண்டால் நீங்கள் ஒரு கலைஞராகவே இருக்க முடியாது” சந்திரசேகர் குறிப்பிட்ட எந்த ஒருபாணியையும் பின்பற்றவில்லை. உலகம் முழுவதும் சுற்றி கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான சிறந்த நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்.

“இந்த ஆண்டுகள் எனக்கு திருப்தி அளித்துள்ளன. நான் விரும்பியதை செய்திருக்கிறேன். எனது ரயில் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கொஞ்சம் மெதுவாக” என்று அவர் சொல்கிறார். பத்மபூஷன் விருது பெற்ற நாட்டியக் கலைஞர் சந்திரசேகர் 70 ஆண்டுகளுக்குமேல் நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறார். அவருடன் அனுஸ்ரீமாதவன் நிகழ்த்திய உரையாடல்:

> இசையும் நாட்டியமும் எப்போதும் உங்கள் வாழ்க்கையின் பகுதியாக இருந்து வருகிறது. இப்போதுவரை மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தோன்றவில்லையே… ஆம். எனக்கு 10 வயது ஆகியிருந்தபோது நான் கலாசேஷத்ராவுக்கு வந்தேன். நான் இசை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தந்தை ஆர்வமாக இருந்தார். அப்போது நாங்கள் சிம்லாவில் குடியிருந்தோம். பாட்டுவாத்தியார்களைக் கொண்டு எனக்குப்பயிற்சி அளித்தார்கள். இவர்கள் அரசுப் பணியாளர்களால் அழைத்துவரப்பட்டவர்கள். நான் நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓராண்டுக்குப்பிறகு ருக்மணிதேவி எண்ணினார். எனது தந்தையிடம் அவர் அனுமதிபெற்றார். அவரது கையில் நான் களிமண்ணாக இருந்தேன். அவர் என்னை சிறப்பாக வார்த்தெடுத்தார். எனக்கு நாட்டிய அரங்கேற்றம் நடத்த வேண்டும் என்றும் அவர் தீர்மானித்தார். 1945 – 54 எனதுவாழ்க்கையின் சிறப்புமிக்க ஆண்டுகள்.

உங்களின் முதலாவது மேடை நிகழ்வு பற்றி சொல்லுங்களேன்… ருக்மணிதேவியின் தயாரிப்புகள் பலவற்றில் நான் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நான் எம்எஸ்சி தாவரவியல் படித்துக் கொண்டி ருந்தபோது தில்லியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முதலாவது விழாவில் (1954) நான் பங்கேற்றேன். எனக்காகப்பாடுவதற்கு யாருமில்லை. தற்செயலாக, நண்பர் ஒருவர் பாடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். எனக்காகப் பாட முடியுமா என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அந்தப் பல்கலைக்கழகத்தில் மிருதங்கம் வாசிக்கும் மற்றொரு மாணவரையும் கண்டறிந்தேன். அதன்பிறகு எனக்கொரு ஆசிரியர் தேவைப்பட்டார். பல்கலைக்கழகத்திலிருந்து சில மைல் தூரத்துக்கு அப்பால் ஒரு ஆசிரியரையும் கண்டடைந்தோம். இப்படித்தான் எனது முதலாவது தனிநிகழ்வை நடத்தினேன். பரதநாட்டியத்தில் முதல் இடத்தை நான் வென்றேன். ஆனால் அந்தச் சான்றிதழ் இப்போதும் ‘ஆண்’ என்றுதான் குறிப்பிடுகிறது. (சிரிக்கிறார்). எனது முதலாவது சர்வதேச நிகழ்வு இந்தியப் பல்கலைக் கழக மாணவர் – ஆசிரியர் தூதுக்குழு மூலமாக 1955-ல் சீனாவில் நடைபெற்றது. பனாரஸ் பல்கலைக் கழகத்தில் அப்போது துணைவேந்தராக இருந்த சி.பி.ராமசாமி ஐயர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த என்னைத் தெரிவு செய்தார். இந்த நிகழ்வு நாட்டியத்தில் எனது ஆர்வத்தின் வாயில் திறப்பாக அமைந்தது.

ஒரு ஆசிரியராக உங்களின் பயணம் பற்றி…ஆசிரியராக எனது பணி முதலில் கலாசேஷத்ராவில் 1956-ல் தொடங்கியது. 3 மாதங்கள் அங்கே இருந்தபோது எனக்கு மாதம் 100 ரூபாய் தந்தார்கள். பிறகுநான் மீண்டும் முசோரிக்குச் சென்றேன். அங்கே ஒரு பள்ளியில் எல்லா பாடங்களையும் பயிற்றுவித்தேன். மீண்டும் ஒரு திருப்புமுனை. நான் ஒரு நாட்டியக் கலைஞராக விரும்பினேன். 1980களில் நாட்டியத்தை ஒரு பாடமாகக் கொண்ட முதல் பல்கலைக் கழகம் என்ற பெருமையுடைய பரோடா பல்கலைக் கழத்தில் நான் பேராசிரியராக நியமிக்கப்பட்டேன். 1997 வரை அங்குநான் பயிற்றுவித்தேன். இப்போதும் எனது திருப்திக்காக நான் பயிற்சி அளிக்கிறேன். என்னிடமிருந்து ஒரு சிலவற்றை மட்டும் கற்றுக் கொள்ள சிலர் விரும்புகிறார்கள். ஆனால் நான் அதற்கு உடன்படுவதில்லை. எனது மாணவர்கள் சிறந்த நாட்டியக் கலைஞர்கள் ஆகவேண்டும் என்பதே என்விருப்பம்.

ஆண்களில் பலர் பரதநாட்டியம் கற்கிறார்கள். ஆனால் இன்னமும் பாலினப் பாகுபாடு இருக்கிறதே. அது பற்றி தங்களின் கருத்து… நாட்டியத்திற்குப் பாலினம் ஒன்றும் முக்கியமானதல்ல. ஒரு காலகட்டத்தில் நாட்டியம் பெண்களுக்கானது என்று முத்திரை குத்தப்பட்டது. சிருங்கார பரதத்தில் எங்கேயும் நாட்டியம் ஆணுக்கானது என்றோ பெண்ணுக்கானது என்றோ கூறப்பட்டிருக்கவில்லை. ஒரு நாட்டியக் கலைஞர் என்ற முறையில் சொல்கிறேன் அது கூடுதலாக ஆண் தன்மையோ கூடுதலாகப் பெண் தன்மையோ கொண்டதல்ல. நிறைய பையன்கள் இந்தக் கலையை கற்றுக் கொள்வதற்கு நன்றி சொல்ல வேண்டும். நமது காலத்தில் கதக், கதகளி, ஒடிசி போன்ற நாட்டியக் கலை வடிவங்கள் அனைத்தும் ஆண்களால் நிரப்பப்பட்டன.

பரதநாட்டியமும், மோகினியாட்டமும் தான் பெண்களுக்கான நாட்டியமாகிவிட்டன. முற்கால நட்டுவனார்கள் எல்லோரும் ஆண்கள் தான். அவர்கள் வியக்கத்தக்கவகையில் உடல் அசைவுகளையும் அபிநயங்களையும் பெற்றிருந்தனர். சமூக அழுத்தங்கள் காரணமாக அவர்களால் பொதுவெளியில் நாட்டியம் ஆடமுடியவில்லை. v நீங்கள் எதிர் காலத்தில் என்ன செய்ய உத்தேசம்?
உண்மையில் எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்து நாட்டியம் ஆடுவதே என் விருப்பம். எப்போது எனக்கு வாய்ப்புகிடைக்கும் என்று தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் மறுப்பு சொல்ல நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கை முறையும் கலைமீதான ஈடுபாடும் எனது பெற்றோர்கள் மற்றும் குருவின் ஆசீர்வாதமும் என்னை வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

(நன்றி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – 14.09.2017)
தமிழில் : மயிலைபாலு

Leave A Reply

%d bloggers like this: