சாரண, சாரணியர் இயக்கத்தில் செயற்குழு கூட்டாமல் பல்வேறு மாவட்டங்களில் முன்னாள் நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். குறுகிய கால அவகாசத்தில் புதியவர்களை நியமித்து, பாஜக வாக்குகளாக மாற்றியதன் விளைவாகவே ஹெச்.ராஜாவிற்கு 52 வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும், பல மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்வதற்காகவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்கிற ரகளையில் பாஜகவினர் ஈடுபட்டனர் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு பாரத சாரண, சாரணி இயக்கம் உள்ளது. நாட்டுப்பற்று, இறைப்பற்று, கருணை உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாரணர் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு ஆளுநர், குடியரசுத்தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார். இந்த விருது பெற்றவர்களுக்கு காவல், ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட மத்திய அரசு துறை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகத்தில் 95 சதவீத அனைத்து வகை பள்ளிகள் சாரண, சாரணி இயக்கத்தில் பதிவு செய்தாலும், 80 சதவீத பள்ளிகள் இந்த இயக்கம் செயல்படாமல் முடங்கியுள்ளது. இது நிர்வாகத்திலும் எதிரொலித்தது. பல ஆண்டுகளாக சாரண, சாரணியர் தேர்தல் நடத்தவில்லை. செயற்குழு, பொதுக்குழு விதிகளில் மாற்றம் செய்தபின் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் தலைவர் பதவிக்கு முன்னாள் கல்வி இயக்குனர் மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர்  போட்டியிட்டனர். எச்.ராஜா போட்டியிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும் எடப்பாடிக்கு சால்வையை போர்த்தி காரியம் சாதிக்க முயன்றது பாஜக. இந்நிலையில் நடைபெற்ற சாரண,சாரணியர் இயக்க தேர்தலில் 286 வாக்குகள் பதிவாகின. இதில் மணி 232 வாக்குகளும், எச்.ராஜா 52 வாக்குகளும் பெற்றனர். மணி எச்.ராஜாவை விட 180 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார். 2 ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

பாஜகவின் பினாமி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கும் போதே எப்படியாவது ஆர்எஸ்எஸ் சித்தாந்ததை கல்வியில் நுழைத்துவிட வேண்டும் என சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சியில் இறங்கியிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை திடீரென சாரண சாரணியர் இயக்கத் தலைவராக கொண்டு வரும் முயற்சி நடைபெற்றது. எப்படி எந்த அடித்தளமும் இல்லாத நிலையில் பாஜக இப்படி களம் இறங்க பார்க்கிறது என்ற வினா பல்வேறு தரப்பினரிடமும் எழுந்தது. இது பிச்சை எடுக்கும் வேலையில்லை, தட்டி பறிக்கும்  வேலையாக இருக்கிறதே என பலரும் சந்தேகித்தனர். இந்நிலையில் சாரண சாரணியர் இயக்க தேர்தலும் முடிந்தது. எச்.ராஜாவும் 52 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள் ஏதார்த்தமாக கிடைத்தவையா, திட்டமிட்டு திணிக்கப்பட்டு விழுந்த ஓட்டுக்களா என விசாரணையில் இறங்கிய போது பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆலோசனையின் பேரில் திடீரென சாரண, சாரணியர் இயக்க செயற்குழுவை கூட்டாமல் பல்வேறு மாவட்டங்களில் சாரண சாரணியர் இயக்க நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் கல்வித்துறைக்கு சம்பந்தமே இல்லாத ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பலரை சாரண சாரணியர் இயக்கத்தின் புதிய நிர்வாகிகளாக தமிழகம் முழுவதும் பரவலாக  நியமித்திருக்கின்றனர். பின்னர் அவர்களை அவசர அவசரமா வாக்காளர் பட்டியலிலும் இணைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் கோவையில் சாரண சாரணியர் இயக்க நிர்வாகிகளாக இருந்த 4 பேர் எந்த காரணமுமின்றி திடீரென நீக்கப்பட்டு புதியதாக 4 பேரை நிர்வாகிகளாக நியமித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது

தேர்வான சாரணர், சாரணியர் இயக்க செயற்குழு  நிர்வாகிகள் பதிவிக்காலம் 5 ஆண்டு ஆகும். கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், சாரணர் பயிற்சி ஆசிரியர்கள் உள்ளடக்கியவர்கள் மட்டுமே, நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்று விதியுள்ளது. மாவட்ட சிஇஓ, சாரணர் இயக்க முதன்மை ஆணையராக செயல்படுவார். கோவை மாவட்டத்தில் 21.11.2014ம் ஆண்டு முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் நடந்த செயற்குழுவில் மாவட்ட ஆணையாளர்( சாரணர்), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆணையாளர் (சாரணியர்), தற்போது உள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்(பொ) கீதா, சாரண அசிரியர் பிரதிநிதி (சாரணர்) சிவநாராயணன், சாரண ஆசிரியர் பிரதிநிதி (சாரணியர்) அருணாதேவி நியமிக்கப்பட்டனர். இவர்கள் கீழ் மாவட்டத்தல் 120 பள்ளிகளில் இருந்து 1,500 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். நடப்பாண்டு 52 பேர் விருது பெற்றுள்ளனர்.

கோவை மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கீழ் இவர்கள் செயல்பட்டு வந்தனர். இயக்க தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. கணேஷ்மூர்த்தி நீங்கலாக, பாலகிருஷ்ணன், கீதா, சிவநாராயணன், அருணாதேவி ஆகிய 4 பேர் நீக்கப்பட்டனர். பதவிக்காலம் 3 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் ஏன் நீக்க வேண்டும். எந்த செயற்குழுவிலும் நீக்கும் நடவடிக்கை குறித்தோ, புதியதாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்தோ விவாதிக்கப்படவில்லை. என்ன நடக்கிறது என புரியாமல் நீக்கப்பட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து  இதுகுறித்து கோவை பாரத சாரண, சாரணியர் இயக்கதினர், மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நடவடிக்கையில்லை.  ஆனால் புதியதாக எந்த அடிப்படையில் நிர்வாகிகளை நியமித்திருக்கின்றனர் என விசாரித்தோம்.

இதுகுறித்து  சாரண, சாரணியர் இயக்கத்தின்  முன்னாள் நிர்வாகி  ஒருவர் கூறுகையில், புதியதாக நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பின்னணியை பார்த்தாலே உங்களுக்கு புரியும். இது திட்டமிட்டு கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ் சிந்தாந்ததை புகுத்த செய்யும் ஏற்பாடு என்று. உதாரணமாக சீனிவாசன் புதியதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கல்வித்துறையில் நேரடியாக எந்த பணியிலும் இல்லை. இவர்தான் இன்று  சாரணர் மாவட்ட ஆணையாளர் ( இவர் மீது ஏற்கனவே பள்ளி மாணவிகளை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளது ). அடுத்து நந்தினிரங்கசாமி சாரணியர் மாவட்ட ஆணையாளர், சதாசிவம் மாவட்ட சாரண பிரதிநிதி, மைதிலி மாவட்ட சாரணியர் பிரதிநிதியாக தேர்வாகி வாக்காளர் பட்டியலில் இனைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் சிலர் பரத நாட்டியம் கற்றுக்கொடுப்பவர்களும்,  கட்டிட துறையை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள். இவர்கள் அனைவரும் சங்பரிவார் அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஆவர்.

அதே போல் சென்னை என்சிசி இணை இயக்குனராக இருந்த முன்னாள் கல்வி அதிகாரி தர்மராஜ் என்பவர் பாஜகவிற்கு மிகவும் நெருக்கமானவர். அந்த அதிகாரி அதிமுகவின் முக்கிய புள்ளிகளுடன் இணைந்து, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக தேசிய செயலாளரை வெற்றிபெற வைக்கும் நோக்கில் சென்னை, கோவை, திருப்பூர், திருவாரூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்த  நிர்வாகிகளை நீக்கிவிட்டு,  ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்  இயக்கங்களுக்கு நெருக்கமானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இருந்த நிர்வாகிகளை விதிமுறைகளை மீறி திட்டமிட்டு நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் கல்வி அலுவலர் ஆதரவாளர்களுக்கும், தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தினருக்கும் மறைமுகமாக கடும் மோதல்கள் நடந்துள்ளன. அப்போது  மாநில நிர்வாகிகளுக்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து பிரச்சனை பெரிது படுத்த வேண்டாம். சொல்வதை செய்யுங்கள் என கடுமையான  அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக ஆதரவார்களை நியமிக்கும் விதமாக பலரை நீக்கும் பட்டியலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குள் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் அதனை முழுமையாக செய்ய முடியவில்லை. இந்நிலையிலேயே தேர்தலை இப்போது நடத்தக்கூடாது. இந்த தேர்தல் செல்லாது என்பது போன்ற அழுத்தங்கள் பாஜக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. வாக்கு பதிவு நடைபெற்ற தினத்திலும்  தேர்தலை தள்ளிவைப்பதற்கு எச்.ராஜா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் கும்பல்  பல்வேறு பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். அதனை தமிழக சாரண சாரணியர் இயக்கத்தினர் தற்போது முறியடித்துள்ளனர்.இதன் மூலம் பிச்சை எடுப்பதற்கு பதிலாக தட்டி பறிக்கும் அளவிற்கு பதவி வெறிபிடித்து அலைகின்றனர். அதில் எச்.ராஜாவின் பதவிவெறி தில்லுமுல்லு வேலைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

  • அ.ரா.பாபு 

Leave A Reply