நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களைப் படிப்படியாக முற்றிலும் வணிக நிறுவனங்களாக மாற்றுகிற ஏற்பாடு ஒன்று கடந்த ஓராண்டு காலமாக ஓசையின்றி நடந்து வருகிறது. நாட்டின் பல்கலைக்கழகங்களை உலகத்தரத்துக்கு உயர்த்துவது என்று அதற்கு முகமூடி மாட்டப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசு தனது பட்ஜெட்டில், 10 அரசுப் பல்கலைக்கழகங்களும் 10 தனியார் பல்கலைக்கழகங்களும் ‘மேல்நிலைக் கல்வி நிறுவனங்கள்’ என அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் மூலம் உலகின் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் இவையும் இடம் பெறும் என்றும் அரசு கூறியது. சென்ற ஆண்டு இதற்கான வழிகாட்டல்களுடன் முன்வரைவு ஒன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

கல்வியிலும் மாணவர்களின் வாய்ப்புகளிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அந்த முன்வரைவு குறித்து மக்கள் கவனத்திற்கு அரசு கொண்டுவரவே இல்லை. கல்வியாளர்களும் அமைப்புகளும் தங்கள் கருத்துகளைச் சொல்வதற்குப் போதிய கால அவகாசமும் தரப்படவில்லை. இப்போதோ, மேற்படி மேல்நிலைத் தகுதிக்காக விண்ணப் பிக்கக்கூடிய ஒரு கல்வி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், அந்தக் கல்வி நிறுவன அறக்கட்டளை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 3,000 கோடி ரூபாய் சொத்து இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது! ஏற்கெனவே இது ரூ.8,000 கோடியாக இருந்தது, சிலர் அது சாத்தியமல்ல என்று சொன்னதைத் தொடர்ந்து இப்போது 3,000 கோடியாக்கப்பட்டிருக்கிறது.

இது தனியார் மயமாக்கலையும் தாண்டி முற்றிலும் கார்ப்பரேட்மயமாக்குகிற சதியேயாகும். அம்பானிகளும் அதானிகளும்தான் கல்வி வள்ளல்களாகவும் உலா வருவார்கள். இத்தகைய நிறுவனங்களில் சமூக நீதி சிறுமைப்படுத்தப்படும், இடஒதுக்கீடு கொள்கை, மாநிலங்களின் விகிதங்கள் புறக்கணிக்கப்படும். ஆசிரியர்களிலும் மாணவர்களிலும் மூன்றிலொரு பங்கினர் வெளிநாட்டவர்களாக இருக்க அனுமதிக்கப்படும். ‘மேல்நிலை’ ஆக்கப்படும் அரசு நிறுவனங்கள் கூட, உலகச் சந்தைக்கேற்ப கட்டணங்களை நிர்ணயிக்க வழிசெய்யப்படும். இந்தியாவின் ஏழைக்குடும்பங்களையும் ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் சேர்ந்தமாணவர்களுக்கு இந்நிறுவனங்களின் கதவுகள் மூடப்படும். உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுடைய கல்வித்தரம், ஆசிரியர்களின் சுதந்திரம், மாணவர்கள் எதைப் பற்றியும் விவாதிக்கிற சூழல் போன்றவற்றை உறுதிப்படுத்திய தால்தான் அந்தப் புகழைப் பெற்றனவேயன்றி, சொத்தின் அடிப்படையில் ‘உலகத் தர நிறுவனம்’ என்று அரசுகளால் அறிவிக்கப்பட்ட தால் அல்ல. உலக வர்த்தக நிறுவனம் வரைந்த கோட்டில் செல்கிற இந்த கார்ப்பரேட்மயமாக்கல் நடவடிக்கை உடனே விலக்கிக்கொள்ளப் பட்டாக வேண்டும். மக்களிடம் சொல்லாமல் அரசு மறைக்கிற இந்த உண்மைகளைக் கல்வி உரிமை இயக்கங்கள் சொல்ல வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: