-இரா.சோமசுந்தர போசு
உலகின் மிக நீளமான ரயில் பாதைகளில் ஒன்றான பைக்கால் – அமூர் – மெயின் லைன்  என்று கூறப்படும் 4287 கிலோமீட்டர் தூர ரயில்பாதையை சோவியத் யூனியன் வாலிபர் சங்கத்தினர் அமைத்தனர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு, இது போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்தது சோவியத் யூனியன் வாலிபர் சங்கம்.
இதன் விவரம் என்ன?

‘‘காம்சமால்” (KOMSOMAL) அப்படியென்றால் ….. ?
ரஷ்ய வாலிபர் சங்கத்தின் பெயர்தான் இது. 1918 அக்டோபர் 29ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்திற்கு அப்போதைய பெயர் “ரஷ்ய கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கம்” இதன் ரஷ்யச் சொற்களின் சுருக்கம்தான் “காம்சமால்”.

லெனின் மறைவுக்குப் பிறகு, ஜூலை 1924இல் லெனின் பெயர் சேர்க்கப்பட்டு, “ரஷ்ய லெனின் கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், பல நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டு, சோவியத் யூனியன் உருவான பிறகு, மார்ச் 1926இல் “அனைத்து யூனியன் லெனின் கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புரட்சிக்கு முன்னர்

“தொழிலாளர்களின் வருங்காலத் தலைமுறை எவ்வாறு வளர்க்கப்படுகிறதோ, அதை முழுமையாகச் சார்ந்தே தொழிலாளி வர்க்கத்தின் எதிர்காலமும், அதன் விளைவாக மனித குலத்தின் எதிர்காலமும் அமையும்” என்றார் கார்ல் மார்க்ஸ்.

இதை உணர்ந்த லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, ரஷ்யப் புரட்சிக்கு முன்பிருந்தே வாலிபர்களுக்கும் – இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் – தனிக் கவனம் செலுத்தி வந்தது. தன்னிச்சையாகவும், திட்டமிட்டும் பல வாலிபர் சங்கங்கள் உருவாகி வந்தன.
லெனின் 1916 டிசம்பரில் எழுதிய கட்டுரையில் சோசலிசத்தை நோக்கி வாலிபர்கள் செல்ல வேண்டியது பற்றிக் குறிப்பிட்டார்.“சோசலிசத்தை நோக்கி வாலிபர்கள் முன்னேற வேண்டும்; தங்களது தந்தையர்களிடம் இருந்து வேறுபட்ட முறையில், மற்ற பாதைகளில், மற்ற வடிவங்களில், மற்ற சூழ்நிலைகளில் தேவையின் காரணமாக அவர்கள் முன்னேற வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தச் சூழ்நிலையில்தான் மகத்தான நவம்பர் புரட்சி வெடித்தது. புரட்சியில் வாலிபர்கள் பெரும் பங்காற்றினார்கள். பெட்ரோகிராட் நகரில், வாலிபர் சங்கத்தின் முயற்சியால் 5000க்கும் மேற்பட்ட இளம் தொழிலாளர்கள், “செங்காவலர்கள்” என்று அழைக்கப்பட்ட, ஆயுதம் தாங்கிய தொழிலாளர் படையில் சேர்ந்தனர். புரட்சியின் அனைத்துப் பணிகளிலும் வாலிபர் சங்கங்களின் தோழர்கள் எழுச்சியுடன் செயல்பட்டார்கள்.

புரட்சிக்குப் பின்னர்
புரட்சி வெற்றி பெற்ற ஓராண்டில் ஒருங்கிணைந்த வாலிபர் சங்கம் அமைக்கப்பட்டது. இந்தச் சங்கம் உருவானதில் அதி முக்கியப் பங்கு வகித்த தோழர் யார் தெரியுமா? வாலிபர்கள், பெண்கள் கல்வி ஆகியவற்றில் எப்போதுமே சிறப்புக் கவனம் செலுத்தி வந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளரும், லெனினுடைய மனைவியுமான“க்ரூப்ஸ்கயா”தான் அந்தத் தோழர்.

இவர், வாலிபர்களுக்கு என்று கட்சியின் வழிகாட்டுதலின்பேரில், அதே வேளையில் சுயேச்சையான ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வாலிபர் சங்கத்துக்கான சாசனம் ஒன்றை “ப்ராவ்தா” இதழில் 1917 ஜூன் மாதத்தில் எழுதினார். வாலிபர் சங்கங்களை உருவாக்குவதிலும், உதவுவதிலும், வழிகாட்டுவதிலும் கட்சி அதிக அக்கறையுடன் செயல்பட்டது.

புதிய சமூகத்தை உருவாக்குவதற்கு விரும்பிய லெனின், இதற்கு, சோவியத்தின் இளைய உறுப்பினர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என கருதினார். இதன்படி, 1917 புரட்சிக்குப் பிறகு, ஓராண்டு கழித்து 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள் போல்ஷ்விக் (கம்யூனிஸ்ட்) கட்சியினரின் ஆதரவோடு, முதல் இளைஞர் மாநாட்டில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது.

கம்யூனிசத்தின் மாண்புகளை  இளம் உறுப்பினர்களுக்குக் கற்றுக் கொடுப்பதும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் நல்வாழ்வு வாழத்தக்க வகையில் சமுதாயத்தை உருவாக்குவதுமே இச்சங்கத்தின் நோக்கமாகும். முந்தைய நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் இருந்த மோசமான பழக்கங்களை எதிர்த்து இந்த சங்கம் இயக்கங்களை மேற்கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுகளை விளக்கக்கூடிய கூட்டங்களை இந்த அமைப்பு நடத்தியது.

மது அருந்துதலுக்கு எதிரான போராட்டத்தை 1980 மத்தியில் மேற்கொண்டது. மது இல்லாத காம்சமால் திருமணங்கள் வெகுவாக நடத்தப்பட்டன. மேலும், ஏழை, பலவீனமான விவசாயிகளுக்கு அறுவடைக் காலங்களில் உதவினர். ஒவ்வொரு நிறுவனத்திலும், ஓவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலும் காம்சமால் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, 1918 முதல் 1971வரையிலான காலத்தில், காம்சமால் அமைப்பிலிருந்து சுமார் 1கோடிப் பேர், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆனார்கள்.

வாலிபர் சங்கத்தின் கடமைகளாக லெனின் வகுத்துத் தந்தது
“வாலிபர்களின் கடமை என்ன என்பதை ஒரே வார்த்தையில் சொல்லலாம். “கற்க”  என்பதுதான் அது. அதாவது, கம்யூனிசத்தைக் கற்க வேண்டும். அது மட்டும் போதாது, மனிதகுலம் உருவாக்கிய அறிவுக் கருவூலம் அனைத்தையும் கொண்டு உங்களது சிந்தனையை வளப்படுத்த வேண்டும். அது மட்டும் போதாது. தொழிலாளர்கள், விவசாயிகளுடன் சேர்ந்து போராட வேண்டும்; சேர்ந்து உழைக்க வேண்டும்” என்ற பொருளில் அவர் விரிவாக விளக்கிப் பேசினார்.வாலிபர் சங்க மூன்றாவது மாநாட்டில், 1920 அக்டோபர் 22 அன்று லெனின் பேசினார். லெனின் வகுத்த பாதையில் வீறுநடை போட்டது வாலிபர் சங்கம். தொழிலாளி, விவசாயி வர்க்க இளம் ஆண்களும், பெண்களும் வாலிபர் சங்கத்தில் அணி திரண்டார்கள். அன்றைய ரஷ்யாவில் வசதி படைத்தோரின் பிள்ளைகள்தான் மாணவர்களாக இருந்தார்கள். எனினும், அவர்களும் ஓரளவுக்கு வாலிபர் சங்கத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். 14 வயது முதல் 28 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்தச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

இந்தச் சங்க உறுப்பினர்களின் தியாகச் செயல்கள் சோவியத் வரலாறு முழுவதும், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆற்றிய துணிச்சலான செயல்களுக்கான ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்:

1818-1820 ஆண்டுகளில் சோவியத் அரசுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, இந்த இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னணியில் நின்று போராடிய வீரம் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், போரினால் ஏற்பட்ட பேரிழப்புகளிலிருந்து நாட்டைப் புனரமைப்பதற்கும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் முன்னணியில் இருந்து செயலாற்றினார்கள்.

1941-45 இல் பிற நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில், இவர்களின் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவையாகும். அலெக்சாண்டர் என்ற வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த போர்வீரர், தன்னுடைய நெஞ்சால், ஜெர்மன் இயந்திரத் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகளைத் தடுத்து நிறுத்திப் பலியானார். ஜோயா என்ற 18வயது இளைஞன், இந்த யுத்தத்தின்போது, ஜெர்மானியரால் கைப்பற்றப்பட்ட வீடுகளைக் கொளுத்தினான். இதற்காக, ஜெர்மானியப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டான்.

சாதனை, சாதனை, சாதனை
அதுவரை விவசாயம் செய்யப்படாத நிலங்களைப் பயன்படுத்த வேண்டுமென, சோவியத் அரசாங்கம் முடிவெடுத்திருந்த வேளையில், கூலித் தொழிலாளர்களே வெளியே தலைகாட்ட அஞ்சுகின்ற அந்தப் பனிப் பொழிவு நிலையிலும், வாலிபர் சங்கத்தைச் சார்ந்தவர்கள், அணி அணியாக இந்தப் பகுதிகளுக்குச் சென்று, நூற்றுக்கணக்கான கூட்டுப்பண்ணைகளை அமைத்தனர். மேலும், உலகின் மிக நீளமான ரயில்பாதைகளில் ஒன்றான பைக்கால் – அமூர் – மெயின் லைன் (BAM) என்று கூறப்படும் 4287 கிலோமீட்டர் தூர ரயில்பாதையை, இந்த சோவியத் வாலிபர் சங்கத்தினர் அமைத்தனர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?1970-80களில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து இந்த ரயில் பாதையை உருவாக்கினார்கள். இந்தத் திட்டம் “காம்சமால் திட்டம்” என்றும்கூட அழைக்கப்பட்டது. இவை போன்ற சிலிர்க்க வைக்கும் ஏராளமான சாதனைகளைப் படைத்ததுதான் காம்சமால். காம்சமாலின் உன்னதப் புதல்வர்களில் ஒருவர் நிகலாய் ஒஸ்த்ரோவ்கி.“வீரம் விளைந்தது” என்ற உலகப் புகழ் பெற்ற நாவலை எழுதியவர்.

அதில் அவர் கூறுகிறார் :“மனித குல விடுதலைக்கான போராட்டமே உலகின் தலைசிறந்த லட்சியம்; அதற்காகவே எனது வாழ்க்கை முழுவதும், எனது சக்தி முழுவதும் அளிக்கப்பட்டது என்று தனது மரணத்தின்போது ஒருவர் சொல்ல வேண்டும்; அப்படிச் சொல்லும் வகையில் அவர் வாழ வேண்டும்”
உண்மைதானே!

Leave A Reply