முறையான பாரமரிப்பின்மை காரணமாக கோவை சிறையில் கடந்த மூன்று வாரங்களில் ஐந்து சிறைவாசிகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்று  1800 க்கும் மேற்பட்ட கைதிகளும், விசாரணைக்கைதிகளாக எண்ணற்றோரும் உள்ளனர். இந்த நிலையில், சமீப காலங்களாக சிறையில் இருக்கும் குற்றவாளிகள் உடல்நலக்குறைவால் பலியாவது அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதிஆயுள் தண்டனை கைதியான அந்தோனி ஆனந்த் (43) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றிருந்த குருசாமி (59) என்பவர் கடந்த 1 ஆம் தேதி மரணமடைந்தார். இவர்களை தொடர்ந்து, கொலை வழக்குகளில்ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த மாணிக்கம் (57), நாராயணசாமி (70)  ஆகியோர் கடந்த 3 மற்றும் 10-ம் தேதி உடல்நலக்குறைவால் பலியாகினர். இந்தநிலையில், சனியன்று மேலும், ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதான ராமசாமி (83) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் இருந்த ராமசாமிக்கு

வெள்ளியன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து சிறை காவலர்கள் ராமசாமியை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்உயிரிழந்தார். கடந்த மூன்று வார காலங்களில் சிறை கைதிகள் ஐந்து பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற சிறைக்கூடம், தரமற்ற உணவு போன்றவற்றின்காரணமாகவும், சிறைச்சாலையில் முதலுதவி செய்வதற்கான போதிய ஏற்பாடுகள் இல்லாததுமே இதுபோன்ற மரணங்களுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த வாரத்தில் நீட்தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளளூரில் பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தாக மூன்று சமூக செயல்பாட்டாளர்களை காவல்துறையினர் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிணையில் வெளிவந்த சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வீரமணி கூறுகையில்,  சிறையில் உள்ள சிறைக்கூடம், வழங்கப்படும் உணவு போன்றவைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் எலி, பெருச்சாளிகள் அனைத்தும் கைதிகளோடு குடியிருக்கிறது. ஒரு அறையில் ஐந்துபேர் வரை அடைக்கப்படுகின்றனர்.

அதற்குள்ளேயே கழிப்பிடம், அவசரத்திற்கு சென்றால் தண்ணீர் இல்லையென்றால் விடியும்வரை நாறிக்கொண்டிருக்கும் நிலை, பராமரிப்பில்லாத நிலையில் எரும்பு மற்றும் கொசுக்கடி போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்பட்டு நோய்வாய்ப்படும் நிலையில் உள்ளது என்றார். மேலும், தரமில்லாத உணவாலும் செரிமானப்பிரச்சனையால் ஏற்படும் நோய் என கைதிகள் பெரும் துன்ப துயரத்திற்கு ஆளாகிவருவதாகவும், நோய் முற்றிய நிலையில்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவதாகவும், போதுமான மருத்துவ வசதிகளை சிறையில் ஏற்பாடு செய்தால்கூட குறைந்த பட்சம் உயிர்களை பாதுகாக்க முடியும் என வேதனை தெரிவித்தார்.

 

Leave A Reply