வாஷிங்டன்;
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக வாஷிங்டனில் இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பாக உலக வங்கி உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரைப் பயன்படுத்த, இரு நாடுகளுக்கும், சில விதிமுறைகளை உருவாக்கப்பட்டன.இந்நிலையில், ஜீலம் மற்றும் செனாப் ஆற்றுப் பகுதியில் கிஷன்கங்கா, ராட்லே ஆகிய நீர்மின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டபோது, அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் உலக வங்கியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இரு நாடுகளும் உலக வங்கியில் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தன. கடைசியாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி உலக வங்கி அதிகாரிகள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக (செப். 14, 15) வாஷிங்டனில் நடைபெற்றது.

உலக வங்க தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் தொடர்ந்து பாரபட்சமின்றி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினருக்கும் உலக வங்கி வலியுறுத்தியது. இவை தவிர வேறுபல அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. ஆனாலும், பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.“இந்த கூட்டத்தின் முடிவில் உடன்பாடு ஏற்படாதபோதிலும், ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாகவும், இவ்விவகாரத்தில் இரு நாடுகளும் இணக்கமான முறையில் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் அமர்ஜித் சிங் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஆரிப் அகமது கான் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

Leave A Reply