சென்னை,
சாரணர்-சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் வாக்குப்பதிவு நடந்தது.
தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. மொத்தம் 499 வாக்குகள் உள்ளன. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை 10.20 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடிய பா.ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் இருந்தனர். துணை போலீஸ் கமி‌ஷனர் சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த போது பா.ஜ.க.வை சேர்ந்த ரமேஷ் என்பவர் உள்ளிட்ட 3 பேர் தேர்தல் அதிகாரியிடம் சென்று, தேர்தலை நடத்தக் கூடாது, விதிகளை மீறி இந்த தேர்தல் நடக்கிறது. முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் வைத்தது முறையல்ல. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இன்று தேர்வு நடப்பதால் அதில் பங்கேற்பவர்கள் ஓட்டுப்போட முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அங்கு இருந்து வெளியேற்றினார்கள்.
இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி கலைவாணி கூறியதாவது:-
தேர்தல் விதிமுறைகள் படிதான் வாக்குப்பதிவு தொடங்கி முறையாக நடந்தது. காலை 10 மணி முதல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். தேர்தலில் எவ்வித குளறுபடியோ, முறைகேடோ நடக்கவில்லை. இடையூறும் கிடையாது என்றார்.
ஓட்டுப்பதிவு பிற்பகல் நிறைவு பெற்றதும் ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் எச்.ராஜா தேல்வி அடைந்தார். எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் மணி வெற்றி பெற்றார். பதிவான 286  வாக்குகளில் 232 வாக்குகள் பெற்று மணி  அபார வெற்றி பெற்றுள்ளார். வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்று எச் ராஜா படு தோல்வி அடைந்துள்ளார். பதிவானதில் 2 வாக்கு செல்லாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும்  துணை தலைவர் பதவிகளுக்கு மணி பெரியண்ணன், ரங்கநாதன் ஆகிய 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply