அரியலூர்;
மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு உதவி நிதியாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.1176 மதிப்பெண்கள் எடுத்தும், ‘நீட்’ தேர்வு காரணமாக, எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர், இளைஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், அனிதா மரணத்திற்கு நியாயம் வழங்க வேண்டும்; ஏழை- எளிய, கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவை சிதைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், அனிதா மரணம் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள், அதன் துணைத்தலைவர் முருகன் தலைமையில் இன்று விசாரணை நடத்தினர்.
மாணவி அனிதாவின் சொந்த ஊரான- அரியலூர் மாவட்டம் குழுமூரில் அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் ஊர்ப் பொதுமக்களிடம் இந்த விசாரணை நடைபெற்றது.ஆணையத்தின் துணைத்தலைவர் முருகனுடன், ஆதிராவிடர் நலத்துறை இயக்குநர் மதியழகன், முதுநிலை விசாரணை அதிகாரிகள் இனியன் விஸ்டர் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த துணைத்தலைவர் முருகன், “அனிதா மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை அளிக்கும்” என்று தெரிவித்தார். மேலும், “அனிதாவின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் உதவி வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றும் அவர் கூறினார்.

Leave A Reply