புதுதில்லி;
ப்ளூவேல் விளையாட்டுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 3 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இளைஞர்களின் வாழ்வில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இணையதள விளையாட்டான ப்ளூவேல் பெற்றோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் விளையாடும் இந்த விளையாட்டின் மூலம் இளைஞர்கள் தற்கொலை வரை செல்வதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் அருகே விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் ப்ளூவேல் விளையாட்டிற்கு பலியானது அண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர், இந்த விளையாட்டில் இருந்து மீட்கப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பொன்னையா என்பவர் நாடு முழுவதும் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். செல்போனில் இணையதள உதவியுடன் விளையாடப்படும் இந்த விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை வரை தூண்டப்படுவதை தவிர்க்கும் விதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று பொன்னையா தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப்ளூவேல் விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply