பூந்தமல்லி அருகே உள்ள மாங்காடு பாலாஜி நகரில் வசிப்பவர் கருப்பையா (50) . இவர் மாங்காடு குன்றத்தூர் சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இங்கு 8 பேர் வேலை செய்கின்றனர். வழக்கம் போல் வியாழனன்று இரவு விற்பனை முடிந்து கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பேக்கரி கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கடையின் உள்ளே இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பூந்தமல்லி, மதுரவாயல் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பேக்கரி கடையில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்த அதிர்ச்சியில் பேக்கரி கடை அருகே இருந்த புக் ஸ்டோர், பேன்சி கடை, சூப்பர் மார்க்கெட் கடைகளின் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் கட்டிடத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பேக்கரி கடையில் உள்ள ஓவனில் தீப்பிடித்ததால் அருகில் இருந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து மாங்காடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று  விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave A Reply