புதுதில்லி;
பிற மொழி பேசுவோருக்கு மரியாதை கொடுக்கும் பழக்கத்தை, இந்தி பேசுவோர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புத்திமதி வழங்கியுள்ளார்.

தில்லியில்  நடந்த இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘ராஜபாஷா’ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அப்போது ஆற்றிய உரையில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தி பேசாத பகுதிகளில் இந்திக்கு பல காலமாக எதிர்ப்பு நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் என்ன என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தி பேசாதவர்களுக்கு மரியாதை கொடுக்காததே இதற்குக் காரணம்.

இந்தி பேசாதவர்களை மதியுங்கள். இந்தியைத் தாய் மொழியாக கொள்ளாதவர்களை, இந்தி பேசாதவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். அவர்களது மொழியையும் நாம் மதிக்க வேண்டும். பிற மொழிகளையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். பிராந்திய மொழிகளுக்கும் இடம் தர வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் இந்திக்கு உரிய இடம் கிடைக்கும்.

இந்தி பேசுவோர், தமிழர்களிடம் பேசும்போது முதலில் வணக்கம் என்று சொல்லி விட்டுப் பேசுங்கள். சீக்கியர்களிடம் பேசுவதாக இருந்தால் சத் ஸ்ரி அகால் என்று சொல்லுங்கள். முஸ்லிம் சமூகத்தவரிடம் பேசும்போது அதாப் என்று சொல்லுங்கள். தெலுங்கு பேசுவோரிடம் காரு என்று பெயர்களுடன் சேர்த்துச் சொலலுங்கள். பிற மொழிகளையும் பயன்படுத்துங்கள் பிற மொழிகளையும், அதன் கலாச்சாரத்தையும் இந்தி பேசுவோர் எடுத்தாள வேண்டும். தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையான ஒற்றுமையை நாடு முழுவதும் ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: