மாநில உரிமையை பறிக்கும் இந்தியை திணிக்கும் நவோதயாவுக்கு கண்டனம் தெரிவித்து  சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார்.

கி.வீரமணி பேசுகையில், மத்தியில் இருக்கக்கூடிய பிஜேபி அரசு தனது மதவாத சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செய்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் நீட் இன்னொரு பக்கம் நவோதயா.  இரண்டு நாட்களில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் நவோதயா தொடங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆணைப் பிறப்பிக்கிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டாமா ? நீதிபதிகளை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கூறும் அத்தனையையும் ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு நவோதயா தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்’’ என்றார்.

பேராசிரியர் அருணன் பேசியதாவது:
எல்லா மாநிலங்களும் நீட்டையும், நவோதயா பள்ளிகளையும் ஏற்றுக் கொள்ளும் போது தமிழகம் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள், அப்படியென்ன தமிழகத்திற்கு தனித்துவம் எனக் கேட்கிறார்கள். எல்லா மாநிலமும் ஏற்றுக் கொண்டாலும் தமிழகம் ஏற்காது அதுதானே தமிழகத்தின் தனித்துவம். பல ஆண்டுகளாக சமூக நீதிக்காகவும், தாய்மொழி வளர்ச்சிக்காகவும் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்திருக்கிறது. தென்னகத்தை பொறுத்தவரை ஆதிகாலத்தின் இருந்தே அதுதான் நிலைமை. சமூக நீதியில் இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழகம். இப்போது தமிழகம் திமிறி நிற்கிறது காரணம் நியாயமும், நீதியும் நம்பக்கம் இருக்கிறது.

நீட்டின் தொடர்ச்சியாக இப்போது நவோதயா வருகிறது. தாய்மொழியை முடக்குவது நம் அறிவை முடக்குவதற்கு சமம். நவோதயா பள்ளியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. தமிழ்நாட்டில் இயங்கும் நவோதாய பள்ளியில் என் தாய்மொழி இருக்காது என்றால் என்ன நியாயம். இது இளம் மாணவர்களின் நெஞ்சில் இந்தியை திணிக்கும் முயற்சி. அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் பயில உதவி செய்யப்படும் என மத்திய அரசு கூறுகிறது. முதலில் இப்போதுள்ள பள்ளிகளில் கழிவறை, குடிநீர், பரிசோதனைக் கூடங்கள், விளையாட்டு திடல்கள் இல்லை. இவற்றையெல்லாம் முதலில் சரி செய்து விட்டு பிறகு நீட், நவோதயா போன்றவற்றை அமல்படுத்துங்கள் என்றார்.

இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில் நாம் விடுதலை பெற்றுவிட்டோம். நம் மூலை இன்னும் விடுதலை பெறவில்லை. அதனால்தான் மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி ஆகியோர் நீட் வேண்டும், நவோதயா வேண்டும் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக ஒட்டுமொத்த சமுதாயத்தை பாதிக்கும் தீர்ப்புகள் வருகின்றன. அதிமுக அமைச்சர்களுக்கு நீட், நவோதயா பாதிப்புகள் குறித்து தெரியும். ஆனால் ஒன்றும் செய்யமுடியாத சூழ்நிலையில் அவர்கள் உள்ளனர். கொள்கை நம்பிக்கை இல்லாத அவர்கள் பெரியார், அண்ணா, அம்பேத்கர் படத்தை பயன்படுத்தாதீர்கள். இது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்றார்.

தொல்.திருமாவளாவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளாவன் பேசுகையில் நம்மை எதிர்க்க நம்மிடமிருந்தே ஆட்களைத் தயார் செய்கிறார்கள். இதுவும் அவர்களின் ஒரு வகை யுக்திதான். கல்விக்கு மனித வள மேம்பாட்டுத் துறை என்கிறார்கள். இது கல்வி வளர்ச்சிக்கானது அல்ல. கம்பெனிகளில் வேலை வாங்குவதற்கு ஆட்களைத் தயாரிக்கும் வேலைதான் மனிதவள மேம்பாட்டுத் துறை என்பது.

30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நவோதயா நுழைய முடியவில்லை. தனி நபர் ஒருவர் வழக்குத் தொடுக்கிறார். அதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. நீதி என்பது இப்பொழுதெல்லாம் ஆளும் தரப்புப் பக்கம் சாய்ந்து கொண்டுள்ளது. எனவே அதிமுக அரசு உடனடியாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று எடுத்துக்கொண்டால், 60 சதவிகிதத்துக்குமேல் சமஸ்கிருதம் சார்ந்த மொழிகளாகி விட்டன. தமிழைத்தான் அவர்களால் அழிக்க முடியவில்லை. நவோதாயா மூலம் அழிக்கப்பார்க்கிறார்கள் என்றார்.

வி.பி.துரைசாமி
திமுக துணைப்பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி பேசுகையில் தந்தை பெரியார், காமராசர், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் எல்லாம் பாடுபட்டதால்தான் நாம் படித்திருக்கிறோம். இந்தக் கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டது? வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான கூட்டம் இது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு ஆட்சி என்ற ஒன்று இல்லை. அதிகாரிகள் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ள மோடி அரசோ நீதித் துறை வரை தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. சமூக நீதியை, தாய்மொழியை காக்க, வகுப்புவாத சக்திகளை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.

முன்னதாக நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய  நவோதயா பள்ளிகள் கூடாது ஏன் ? என்ற நூலின் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: