===பி.தங்கவேலு===
‘குச்சிக்கிழங்கு’ என்று அழைக்கப்படும் ‘ மரவள்ளிக்கிழங்கு’ விவசாயம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் நடக்கிறது. இதை மையமாக வைத்துத் தான் குச்சிக்கிழங்கு மாவில் இருந்து ஜவ்வரிசி தயாரித்தல் மற்றும் குச்சிக்கிழங்கு மாவு தயாரித்தல் தொழில் 800க்கும் மேலான சிறு-குறு-நடுத்தர ஜவ்வரிசி ஆலைகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இயங்கி வந்தன. தற்போது 350 ஆலைகளாக சுருங்கிவிட்டன. ஆனால், தற்போது இதில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருள்கள் வகை மட்டும் 64 ஆக பெருகி நிற்கின்றன.

ஒரு கட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் வரை பயிர் செய்யப்பட்ட குச்சிக்கிழங்கு, தற்சமயம் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர்களிலும், தர்மபுரி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர்களிலும் பரவலாக தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர்களில் பயிராகிறது. ஏறக்குறைய 4 லட்சம் ஏழை விவசாயக் குடும்பங்களில் இந்த குச்சிக்கிழங்கு தான் பணப்பயிர் சாகுபடியாகும். இது மானாவாரி பயிர். பத்து மாதம் தான். என்றாலும் ஏறக்குறைய கரும்பு போல் வெட்டுவதற்குள் அல்லது கிழங்கு பறிப்பதற்குள் ஒரு வருடத்தை முழுதாக விழுங்கி விடுகிறது.

‘எதிரி எங்கும் இல்லை; நம் அருகில் தான் இருக்கிறான்’ என்பார்கள். அதுபோல் குச்சிக்கிழங்கை கொள்முதல் செய்யும் சேகோ ஆலை உற்பத்தியாளர்களின் புரோக்கர் கொள்ளை, எடை மோசடி, மாவு சத்து தரம் பார்க்கும் மோசடி என பற்பல படுகுழிப் பாதகங்களைத் தாண்டி தத்தளித்து தாக்குப்பிடித்து விவசாயம் செய்து, கண்ணில் உயிரை வைத்து வாழும் குச்சிக்கிழங்கு விவசாயிக்கு, இதே விவசாயத்துறையில் இன்னொரு எதிரியும் முளைத்திருக்கிறது. அதுதான் மக்காச்சோளம். சோளத்தை ஆதிகாலத்தில் ‘முத்து வெல்ல சோளம்’ என்பார்கள்.

இதுதான் நம் பாரம்பரிய சோளம். இது எளிதில் மக்கிவிடும். அடுத்து வீரிய வித்துக்களால் புதுவகை மக்காச்சோளம் வந்தது; இதனை ‘துளுக்கானி சோளக்கதிர்’ என்பார்கள் ஆரம்பத்தில். இது நமது பாரம்பரியப் பயிரன்று. விவசாயத்தில் இறக்குமதியான எத்தனை ஆபத்துக்களில் இதுவும் ஒன்று.

கலப்படம் கனஜோ
மேற்படி மக்காச்சோளம் மாவோடு, பெருமளவு இறக்குமதியாகும் குச்சிக்கிழங்கு மாவையும் ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்திடும் ‘கலப்படத்தொழில்’ தற்போது கனஜோராக தமிழகத்தில்- குறிப்பாக சேகோ ஆலைகள் அதிகமாக இருக்கும் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் நடந்து வருகிறது. கலப்பட ஜவ்வரிசி விற்பனைக்குப் போனால், அதை கேள்வி கேட்க யாருமில்லை.இந்த சிக்கலைத் தீர்த்து குச்சிக்கிழங்கு விவசாயத்தையும், கலப்படம் செய்யாத சிறு-குறு சேகோ ஆலை உற்பத்தியாளர்களையும், இந்த சேகோ உற்பத்தியில் இருக்கும் பல்லாயிரம் விவசாயத் தொழிலாளர்களையும் வாழ வையுங்கள் என்று தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் தொடர்ந்து முறையிடும் படலம் விவசாயிகள் தரப்பிலும், சேகோ உற்பத்தியாளர்கள் தரப்பிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. என்றாலும் அது கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பது தான் சோகம்.

அதைவிட பெரும் சோகம் என்னவெனில் “தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஆயிற்றே… நம் கோரிக்கையை பரிவுடன் கவனிப்பார்’’ என்று சேகோ உற்பத்தியாளர்கள் முறையிட்ட போது, ‘’நான் முதலமைச்சர்; முன்ன மாதிரி அமைச்சரல்ல; நான் யாருக்குன்னு செய்றது?’’ என கைவிரித்தது தான்!
அவர் கைவிரித்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.

மரவள்ளி மாவு வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாக குறிப்பாக உக்ரைன், ரஷ்யா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிறது. இதனால் இங்கு மரவள்ளி விவசாயம் மண்ணைக் கவ்வுகிறது; இதை வைத்து சேலம் மல்லூர், தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி போன்ற ஊர்களில் இருக்கும் வரலட்சுமி மில் போன்ற பெரியப் பெரிய மில்களும், மனசாட்சியற்ற சிற்சில சேகோ உற்பத்தியாளர்களும் ‘கலப்பட’ ஜவ்வரிசி உற்பத்தி செய்து, விற்று வருகிறார்கள்.

செத்துத்தான் போவார்கள்                                                                                                                                                                     இன்னொரு வேதனை என்னவென்றால், இந்த துறையில் ஆணையரான அமுதா என்பவரிடம் முறையிட்டால், “கலப்படத்தால் யாராவது செத்து விட்டார்களா? என்கிறார். சேகோ உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியோடு இதைத் தெரிவிக்கிறார்கள். ஆமாம்… செத்துத்தான் போவார்கள். குச்சிக்கிழங்கு விவசாயிகளும், விவசாயமும் செத்தே போவார்கள்.ஒரு ஏக்கர் குச்சிக்கிழங்குக்கு ஆகும் உற்பத்தி செலவு சுமார் ரூ.50 ஆயிரம்; இது ஒரு வருட பயிர். இதற்கு மேல் விற்றால் தான் விவசாயி வாழ்வதற்கான வருமானம் கிடைக்கும். நல்ல விளைச்சல் என்றால் சுமார் 150 முதல் 190 மூட்டை கிழங்கு கிடைக்கும். ஒரு மூட்டைக்கு ரூ.700-800 விலை கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் ஒரு ஏக்கர் கிழங்கு சுமார் ரூ.1 லட்சத்திற்கு விற்றால் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கலாம். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி குறைந்தது ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கிறதா?

இறக்குமதி மரவள்ளி மாவு மற்றும் மக்காச்சோளம் மாவு கலப்படம் செய்வதால், சேகோ உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனால் குச்சிக்கிழங்கு விவசாயிக்கு நட்டம் தான் மிச்சம்.

ஒரு மூட்டை குச்சிக்கிழங்கு மாவு ரூ.1000 என வைத்துக் கொள்வோம். இதில் 50ரூ மற்றும் இறக்குமதி மரவள்ளி மாவு மற்றும் மக்காச்சோளம் மாவு கலந்த ஏழு மூட்டை விலை ரூ.500 என்றால், ரூ.500 ஆலைக்கு மிச்சம்; குச்சிக்கிழங்கு விவசாயிக்கு ரூ.500 நட்டம். அதோடு விலைவீழ்ச்சியும் ஏற்படும்; அதனால் குச்சிக்கிழங்கு பயிரிடுவதும் குறைந்து, விவசாயி தூக்குக்கயிறு தேட வேண்டி வரும். விவசாயிகள் வயிற்றில் அடிப்பதும் இல்லாமல், கலப்பட ஜவ்வரிசியால் நுகர்வோர் வயிற்றிலும் அடித்து விடுகிறார்கள். இதற்கு தான் அரசும், அதிகாரிகளும் துணைபோகிறார்கள்.

ஆம், கிடைத்த அந்த ரூ.500இல் ரூ.100 மாவட்ட நியமன அலுவலர் முதல் ஆணையர், அமைச்சர் வரை கப்பம் போய்விடுகிறது. இதிலே கொடிக்கட்டி பறப்பவர் நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கபின்குமார் என்பவர் ஆவார்.

தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம், தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை ஆய்வாளர், உணவுப் பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, சேகோசர்வ், காவல்துறை என எட்டுத்துறை அடங்கிய ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கண்காணிப்புக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இருப்பதாக தெரியவில்லை. கப்பல் கப்பலாக வெளிநாட்டில் இருந்து வரும் இறக்குமதி மரவள்ளி மாவு மற்றும் மக்காச்சோளம் மாவு இந்த துக்கடா ஆலைகளுக்கு மட்டுமா வருகிறது? பெரிய பெரிய ஆலைகளுக்கும் போகிறது. அதைக் கட்டுப்படுத்த என்ன அதிகாரம் இருக்கிறது இந்த கண்காணிப்பு குழுவுக்கு?

எனவே குச்சிக்கிழங்கு விவசாயிக்கும், சிறு-குறு-நடுத்தர உற்பத்தியாளர்களுக்கும் நியாயமான தீர்வு கிடைக்க இரு வழிகள்தான் உள்ளன. ஒன்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து குச்சிக்கிழங்கை கொள்முதல் செய்திட வேண்டும். இரண்டு, கலப்படத்தைக் கண்டறியும் ஆய்வு மையம் ஒன்று மகாராஷ்டிராவில் இருப்பது போல் நாமக்கல் அல்லது சேலம் மாவட்டத்தில் அமைத்து, அதன் மூலம் பெரிய சிறிய ஜவ்வரிசி ஆலைகளில் உற்பத்தி ஆகும். ஜவ்வரிசிகளை ஆய்வு செய்து, கலப்படம் செய்வோர் ஆலை உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்; அதோடு அனைத்து ஜவ்வரிசி விற்பனையும் சேலம் சேகோசர்வ் மூலம் வணிகம் செய்திட வேண்டும்!

இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரும் 19.9.17 அன்று காலை சேலம் சேகோசர்வ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமைச்சர் சேலம் வருகை தரும் போதோ அல்லது சென்னை கோட்டை முன்போ முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் தீர்மானித்து, அதற்கான ஆயுத்தப்பணிகளில் முழு மூச்சாக மேற்கொண்டுள்ளது.

கட்டுரையாளர்:சிபிஐ(எம்)
சேலம் மாவட்டச்செயலாளர்

Leave A Reply

%d bloggers like this: