-====ஏ.கிருஷ்ணமூர்த்தி====
உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளின் விளைவு, அரசின் உதவிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு கூட்டுறவு அமைப்புகளை அனாதைகளாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அனைத்தையும் சந்தையே தீர்மானிக்கும் என்ற உலகமயத்தின் கொள்கையால் சந்தையோடு போட்டியிட்டு கூட்டுறவு சங்கங்களே தங்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகிறது. உலகமயத்திற்கு எந்த சமூக நோக்கமும் கிடையாது.

கட்டுப்பாடும் கிடையாது. லாபம் ஒன்றே அதன் குறிக்கோள். தானாக பிழைத்துக் கொள்ளட்டும் என்ற கோட்பாடு மேலோங்கி கூட்டுறவையும் உலகமயத்தையும் மோதவிடுகிறது அரசு. கூட்டுறவை புறக்கணிக்கும் விதமாக அரசின் உதவிகள் குறைக்கப்படுகிறது. மானியங்கள் ரத்து, விளைபொருளுக்கு ஆதரவு விலையின்மை, பொதுவிநியோகம் சீரழிப்பு போன்றவைகளாலும், செல்லாநோட்டு அறிவிப்பால் நிதி முடக்கம், ஜி.எஸ்.டி. வருமான வரி என தொடர் தாக்குதலையும் இன்றைய கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நிர்வாகச் சீர்கேடுகள்
கூட்டுறவில் கடன் வழங்குவதில் துவங்கி தள்ளுபடி செய்வது வரை ஊழல் மலிந்து வருகிறது. நகைக்கடன் வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக ஊடகங்களில் நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன. தானிய ஈட்டுக்கடன், தனிநபர் கடன், அடமானக் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டதில் முழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நடைபெறாத கூட்டங்கள் நடைபெற்றதாக, விநியோகிக்கப்படாத பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக, கட்டிட பராமரிப்பு, ஏலம், கொள்முதல், விற்பனை, பணி நியமனம் என அனைத்திலும் ஊழல்மயமாகிவிட்டது. குறிப்பாக கூட்டுறவு அமைப்புக்களின் நிதி ஆதாரம் சுரண்டலுக்கு உட்பட்டுள்ளது. சமீபத்தில் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள ஆய்வுக்குழு தொடர்பான சுற்றறிக்கையே இதற்கு சாட்சியாக உள்ளது.

ஜனநாயக செயல்பாடு
ஜனநாயக முறையில் நிர்வாகம் என்பதுதான் கூட்டுறவின் தத்துவமாகும். “அங்கத்தினர்களால் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களாலேயே ஜனநாயக கோட்பாட்டின் படி நிர்வகிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகமும் சட்டம், விதிகள் மற்றும் சங்க துணைவிதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் இருக்கும். இந்தக் குழு சட்டம், விதிகள் மற்றும் துணைவிதிகளின்படி அளிக்கப்படும் அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்படுத்தும்” என தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 33-இல் வரையறுத்து சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய கூட்டுறவு அமைப்புகளில் ஜனநாயக செயல்பாடு கேள்விக்குறியாகவே உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தபோது கூட்டுறவு கடன் அமைப்புகளை புனரமைத்திடவும், கூட்டுறவு அமைப்புக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புக்களாக மாற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இடதுசாரிகள் வலியுறுத்திய குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்தில் 97-வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல் 2013 ஆம் ஆண்டில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தேர்தலை நடத்திட அமைக்கப்பட்ட தனிதேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகவே உள்ளது. உறுப்பினர் சேர்ப்பில் துவக்கி, வாக்காளர் பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, தேர்தல், வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என அனைத்து நடைமுறைகளும் ஆளும்கட்சியின் அசைவுகளுக்கு செவிமடுக்கும் அமைப்பாகவே அமைந்து, தேர்தல் தொடர்பான வழக்குகள் முறையீடுகள் புறந்தள்ளப்பட்டன. பெரும்பகுதி கூட்டுறவு சங்க நிர்வாகங்களை ஆளும் கட்சியினரே கைப்பற்றினர்.
இதன் விளைவுகளை இன்று கூட்டுறவு இயக்கம் சந்தித்து கொண்டுள்ளது.

இந்நிலையில், கூட்டுறவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், நிர்வாக சீர்கேடுகளை களைந்து மக்களுக்கான அமைப்பாக மாற்றவும் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு இயக்கத்தைப் பாதுகாத்திட கூட்டுறவாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் செப்டம்பர் 17 அன்று மதுரையில் நடைபெறுகிறது. கூட்டுறவு இயக்கத்தை பாதுகாக்கத்திட ஒன்றிணைவோம்.

கட்டுரையாளர்:பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் ( சிஐடியு )

Leave A Reply