திருப்பூர், செப்.15 –
தனியார் வங்கிகளுக்குச் சாதகமான கடன் தீர்ப்பாயங்களை ரத்து செய்யுமாறு பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பல்லடம் வட்டம் கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளிங்கிரிநாதன் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று பல்லடம் கொசவம்பாளையம் சாலை பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயி வெள்ளிங்கிரிநாதன் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதைவிட, வங்கி அதிகாரிகளால் கொல்லப்பட்டார் என்று சொல்வதே சரியாக இருக்கும். அவரது மரணத்துக்கு நீதி வேண்டும். முன்னோடி விவசாயி வெள்ளிங்கிரிநாதன், அவரது நிலத்தில் தக்காளி சாகுபடி செய்து, விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் நஷ்டம் அடைந்தார். அதன்பிறகு வெங்காயம் சாகுபடி செய்து ரூ.2 லட்சம் நஷ்டமடைந்தார். ரூ.5 லட்சத்து 10ஆயிரம் நஷ்டமடைந்த நிலையில் அவரால் கடன் தவணைத் தொகையைச் செலுத்த முடியவில்லை. எனவே தனது கடனுக்கு வங்கியை மாற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஆட்சியர் அந்த கடிதத்தை கவனித்து இருந்தால் விவசாயி தற்கொலை நிகழ்வைத் தடுத்திருக்கலாம். வங்கி நிர்வாகம் அவரது டிராக்டர் வாகனத்தை ஜப்தி செய்து கொண்டு போனதால் குடும்ப கௌரவம் போய்விட்டது என்று அவமானப்பட்டு வெள்ளிங்கிரிநாதன் தற்கொலை செய்து கொண்டார். தனியார் வங்கிகள் சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய,மாநில அரசுகள் துணை போகின்றன. கடன் தீர்ப்பாயம் மூலம் கடனை வசூலிக்க, ஜப்தி நடவடிக்கைகளை தனியார் வங்கிகள் மேற்கொள்கின்றனர். இந்த கடன் தீர்ப்பாயங்களை ரத்து செய்ய வேண்டும். இவரது தற்கொலைக்குக் காரணமான வங்கி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயி வெள்ளிங்கிரிநாதன் குடும்பத்தில் மாற்றுத் திறனாளி மனைவி, சிறு வயது மகன் ஆகியோர் வாழ்க்கையைப் பாதுகாக்க ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கியில் அவர் பெயரில் இருக்கும் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம், கோடாக் மகேந்திரா வங்கியில் இருக்கும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.11 லட்சத்து 10 ஆயிரம் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க, எம்.எஸ்.சுவாமிநாத் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். முழுமையான கடன் நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற அனைத்து விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும். இவ்வாறு டி.ரவீந்திரன் கூறினார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பொருளாளர் எம்.ஆர்.வெங்கட்ராமன், நிர்வாகிகள் எஸ்.வெங்கடாசலம், எஸ்.கே.கொளந்தசாமி, ஏ.பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால் உள்ளிட்டோர் உரையாற்றினர். ப.கு.சத்தியமூர்த்தி, சி.சுப்பிரமணியம், ஆர்.பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர். விவசாயி குடும்பத்துக்கு ஆறுதல் இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக டி.ரவீந்திரன், எஸ்.ஆர்.மதுசூதனன், ஆர்.குமார் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மலையம்பாளையத்தில் உள்ள விவசாயி வெள்ளிங்கிரிநாதன் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி, மகன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: