20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தமிழ்நாடு தனியார் மருத்துவமனைகள் முறைப்படுத்துததல் சட்டத்திற்கான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.

தமிழகத்தில் மருத்துவ சேவைகள் தனியார்மயமாக்கப்படுவதை தடுத்தல், தனியார் மருத்துவமனைகளை  முறைப்படுத்துதல், தமிழக நல்வாழ்விற்கான செயல்பாடுகள் எனும் தலைப்பில் வெள்ளியன்று (செப்.15) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை :”ஹெல்த் பார் ஆல்“ மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஆகிய அமைப்புகள் நடத்தின. இதில் கலந்து கொண்டு உ.வாசுகி பேசியதாவது:
சுகாதாரம் அடிப்படை உரிமை. மனிதர்களுக்கு வரக்கூடிய 25 விழுக்காடு நோய்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காததால் வருகிறது. மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவம், மருத்துவர் என வணிகக்கூட்டு வைத்து கொள்ளையடிக்கின்றனர். லாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார்மயம், வணிகமயத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. அதேநேரத்தில் அனைத்தும் தனியார்மயமாகி வரும் நிலையில், தனியார் மருத்துவத்தை முறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவத்தை முறைப்படுத்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு விதிமுறைகள் வகுக்கப்படாததால் செயலற்றுக்கிடக்கிறது. 2010ல் மத்திய அரசு நிறைவேற்றிய ஒழுங்குபடுத்தும் சட்டத்தையும் மாநில அரசு அமல்படுத்தவில்லை. சுதந்திரமாக இருந்தாலும் ஒருசில நியாயமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதேபோன்று லாபம் சம்பாதிக்கும் தனியாரை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்.

100நாள் வேலை திட்டம், கல்வி போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன. மக்களிடம் வசூலிக்கப்படும் வரிகளை ஆட்சியாளர்கள் மக்கள் நலனுக்கு செலவிடுவதில்லை. மாறாக அவற்றை  கார்ப்பரேட்களுக்கு தருகின்றனர். கடந்த 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 17 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகையாக தரப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2016-17ல் மட்டும் வராக்கடனாக 5.75 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இதற்கெதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும்.

மருத்துவம் சேவையாக நீடிக்க வேண்டும். வணிகமயப்படுத்தக் கூடாது. மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது. அரசியல், சமூகம், பொருளாதாரம் அனைத்தும் மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். தனியார் மருத்துவத்தை ஒழுங்குபடுத்தவும், தனியார் மருத்துவமனைகள்சமூகப் பொறுப்பு, வெளிப்படைத் தன்மையுடன்  செயல்பட வைக்கப் தேவையான நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசின்  குடும்பநலத்துறை இயக்குநர் ஜோதி, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் பி.சந்திரா, வழக்கறிஞர் சுரேஷ்பாபு, அமீர்கான் உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: