திருப்பூர், செப்.15 –
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் போராட்டம் காவல் துறையின் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு இடையே கோபாவேசமாக நடைபெற்று நிறைவடைந்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். 9ஆம் நாளாக வெள்ளியன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் மாவட்ட ஆட்சியரகத்திற்கு திரண்டு வந்தனர்.

ஆனால் ஆட்சியரகத்திற்கு முன்பாக தடுப்பரண்களை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை அவர்கள் தடுத்து நிறுத்தியதுடன் முகப்புப் பகுதியில் நிற்கக் கூடாது என்றும் கெடுபிடியில் ஈடுபட்டனர். ஆட்சியரக வளாகத்திற்கு உள்ளேயும் விடாமல், வெளிப்பகுதியிலும் நிற்க விடாமல் தடுத்ததுடன், அங்கிருந்து கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்றும் மிரட்டினர். சிலரை மிரட்டி கைது செய்து வாகனத்தில் கொண்டு சென்றனர். நேரம் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கானோர் அங்கு வந்து சேர்ந்தவுடன் தடைகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே புக முயன்றனர். இதனால் தடுப்பரண் பகுதியில் நின்ற காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே முகப்புப் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டத்தை அதே இடத்தில் தொடர்வதுடன், கலைந்து செல்ல முடியாது என்று உறுதியுடன் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்து கொண்டு செல்லப்பட்ட வர்களை காவல் துறையினர் விடுவித்தனர். அவர்கள் அங்கு வந்தபோது உற்சாகமாக வாழ்த்தி வரவேற்பளித்தனர். இந்நிலையில் காவல் துறையினர் போராட்டத்தினரை கைது செய்வதாக அறிவித்து, ஆட்சியரகம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி இக்கோரிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக மாநில ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்ததால், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் பிற்பகல் பணிக்குத் திரும்பினர்.முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் ஆகியோர் போராட்டக் களத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் கே.தங்கவேல் பேசும்போது, போராட்டக்காரர்கள் மீது காவல் துறையின் அத்துமீறிய நடவடிக்கையை விமர்சித்ததுடன், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தானர். இதற்கிடையே, திருப்பூர் குமரன்சிலை முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக பங்கேற்று புதிய பென்சன் ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஈரோடு:
இதேபோல், வெள்ளியன்று ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். முன்னதாக, தாலுகா அலுவலகம் முன்பு காலை முதல் அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டும், முன் வாயில் கதவை அடைத்தும் காவலர்கள் நின்று கொண்டனர். மேலும், காவல்துறை அதிகாரிகள் அதிக கெடுபிடி செய்து காத்திருக்கும் போராட்டத்தை நடத்த அனுமதி மறுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை வாகனங்களில் ஏற்றி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே, ஜாக்டோ – ஜியோ அமைப்பின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூட்டமைப்பின் மாநில தலைமை அறிவித்ததால், கைது செய்யப்பட்டவர்கள் மதியம் 3 மணியளவில் விடுவித்தனர். அதன் பின்னர், அவர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர்.

Leave A Reply

%d bloggers like this: