கோவை, செப்.15-
சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை அதிகாரி ககன் தீப் சிங் பேடி வெள்ளியன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வை துவக்கினார். கோவை சோமனூர் பேருந்து நிலையம் பராமரிப்பின்மை காரணமாக பழுதடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கட்டடத்தின் உறுதித்தண்மை இழந்து கடந்த 7 ஆம் தேதி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஐந்து பேர் பலியாயினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். அரசின் அலட்சியமே உயிர்ப்பலியாவதற்கு காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசின் சார்
பில் உறுதியளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அரசு முதன்மை செயலாளரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து வெள்ளியன்று சம்பவம் நடந்த இடத்தில் அவர் நேரில் விசாரணையை துவக்கினார். இவருடன் தமிழ்நாடு கட்டட ஆய்வு நிலையத்தின் செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம், பொதுப்பணித்துறை (கட்டட மற்றும் பராமரிப்பு துறை) செயற்பொறியாளர் மாதையன், தமிழ்நாடு வேளாண் விற்பனை கமிட்டியின் செயற் பொறியாளர் செந்தில் நாதன் ஆகியோர் தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு மேற்கொண்டார்.

முதல் கட்டமாக, கட்டடத்தின் தரம், பலம் குறித்து கான்கிரீட் பரிசோதனை நடைபெற்றது. மேலும், கட்டடத்தின் வடிவமைப்பு, பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம், உறுதி தன்மைக்கான பல்வேறு வகையான சோதனைகள், கட்டடத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஆய்வின் அடுத்தக்கட்ட நகர்வுகள் அமையும் என தனி நபர் விசாரணை அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் கருத்துக்களை பெறவுள்ளதாகவும், தேவையின் அடிப்படையில் நேரடி ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோல், மாவட்ட நிர்வாகத்திடம் தொழில்நுட்பம் மட்டுமின்றி, நிர்வாக ரீதியான தகவலையும் கேட்டுள்ளதாகவும், அறிக்கை சமர்பிக்க 2 மாதங்கள் வாய்ப்பிருப்பதாகவும், விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்பிக்கப்படும் என்றார். முன்னதாக, இந்த ஆய்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave A Reply