பண்டை காலத்தில் கொங்கு மண்டலம் காடும், மலையுமாக இருந்துள்ளது. தற்போது கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பநாயக்கன் பட்டியில் நடுகல் ஒன்றுள்ளது. இதை இன்றும் இடையர் குல மக்கள் வழிபட்டு வருகின்றனர். 55 செ.மீட்டர் அகலமும், 50 செ.மீட்டர் உயரும் உடைய இந்நடுகல் முதலில் ஒரு மரத்தடியில் இருந்தது.  வீரராசேந்திரன் தொல்லியல் ஆய்வு மையம் இப்பகுதி மக்களுக்கு மேற்கண்ட நடுகல்லின் சிறப்பை எடுத்துக் கூறிய பின், கிராமத்தார் நடுகல்லுக்கு ஒரு சிறிய கோயில் கட்டி பாதுகாக்கின்றனர்.

இது குறித்து வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் சு.ரவிக்குமார் கூறியதாவது: இந்நடுகல்லில் வீரர்கள் இருவர் உள்ளனர். இவர்களின் இருபுறமும் இரண்டு குறுவாள் காணப்படுகிறது. இருவரும் தலை பாகையும், வலது பக்கம் சாய்ந்த நிலையிலும், காதில் காதணிகளும், மார்பில் நல்ல ஆபரணங்களும், கை மற்றும் கால் பகுதியில் வீரக் காப்பும், இடையில் மட்டும் ஆடையும் அணிந்துள்ளனர். இதில் ஒரு வீரனின் இரு பக்கமும் இரு மாடுகள் அவ்வீரனின் கால்களைத் தாக்குவது போல் உள்ளது. மாட்டுமந்தையை மேய்க்கும்போது, மாடுகளிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கும்போது இவ்வீரன் மாடுகள் தாக்கி இறந்திருக்கலாம் எனக் கருத முடிகிறது. இறந்த வீரன் நினைவாக இவ்வீரக்கல் எடுக்கப்பட்டு அதை இவ்வீரனின் இனக்குழுவை சேர்ந்த மற்றொரு வீரன் வழிபடுவது போல் நடுகல் எடுத்துள்ளனர்.

வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் முல்லை நிலத்து மக்களின் வாழ்க்கைத் தொழிலாக இருந்துள்ளது. குறிப்பாக சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப் படை முல்லை நில மக்களின் வாழ்முறையை தெளிவாக விளக்குகிறது. அதில், “முல்லை நிலத்தி்ல வாழ்ந்த இடையர் குலமகள் வெண்ணெய் எடுத்துவிட்டு மோரை விற்று அதன்மூலம் வரும் வருவாயில் நெல் முதலிய உணவுப் பண்டங்களை வாங்கித் தன் சுற்றத்தார் உடன் உண்ணச் செய்கிறாள். மேலும் நெய் விற்ற பணத்துக்குப் பசும்பொன்னை விரும்பி வாங்காமல் நல்ல எருமைகளையும், பசு மாடுகளையும் அவற்றின் கன்றோடு விலைக்கு வாங்குகிறாள் அந்த ஆயமகள்” (15 – 165) எனக் கூறப்பட்டுள்ளது. எனவே முல்லை நிலத்துக்குரிய கால்நடை சார்ந்த வாழ்வியலை இந்நடுகல் விளக்குவதாக உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னதாக, நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இந்நடுகல் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

கல் திட்டை:
இந்நடுகல்லுக்கு முன்பாக, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கல்திட்டை ஒன்று உள்ளது. கல் திட்டை என்பது தரை மட்டத்திற்கு மேல் பலகைக் கற்களைக் கொண்டு அமைக்கப்படுவதாகும். 75 செ.மீட்டர் உயரம் கொண்ட கல் திட்டையை 100 செ.மீட்டர் அளவு டைய மூன்று பலகைக் கற்களைக் கொண்டு முக்கோண வடிவில் அமைத்துள்ளனர். மேலே 150 செ.மீட்டர் அகலம் உடைய ஒரு பலகைக் கல் கொண்டு மூடியுள்ளனர். ஈமச் சின்னங்களுக்கு உரிய “இடு துளை” இதில் இல்லாததாலும், இங்கு நிலவும் புவியியல் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இக்கல் திட்டை கிராம தெய்வத்துக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: