ஜெய்ப்பூர்;
அப்பாவி முதியவரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள் 6 பேரை, ராஜஸ்தான் மாநில பாஜக அரசு வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் 55 வயதான பால்பண்ணை விவசாயி பெலு கான், ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்த பசு குண்டர்களால் கொடூரமான அடித்துக் கொல்லப்பட்டார். அவர் பசுக்களை கடத்திச் செல்வதாக குற்றம்சாட்டி நடந்த இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விசாரணையில், பெலு கான் பசுக்கள் எதையும் கடத்தவில்லை என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓம் யாதவ், குகும் சந்த் யாதவ், சுதீர் யாதவ், ஜமால் யாதவ், நவீன் ஷர்மா, ராகுல் ஷைனி ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தன. பெலுகான் தாக்கப்பட்ட சம்பவங்கள் செல்போனில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஆதாரமும் இருந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெலுகான் மரணத்திற்கு முன்பாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குற்றம் நடைபெற்றது எப்படி என்பதையும், கொலையாளிகள் யார் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.இவ்வளவுக்குப் பின்னும், குற்றம் சாட்டப்பட்ட பசு குண்டர்கள் 6 பேருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என கூறி ராஜஸ்தான் மாநில பாஜக அரசின் காவல்துறை அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து, பெலு கான் கொலை வழக்கையே முடித்து வைத்துள்ளது.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெறுவதால், பசுவுக்காக நடந்த தாக்குதலில் அந்த அரசு குற்றவாளிகளை காப்பாற்றவே அவர்கள் முயல்வார்கள் என்று ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன. இவ்வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் அப்போது ஏற்க மறுத்து விட்ட ராஜஸ்தான் பாஜக அரசு, இப்போது எதிர்பார்த்தது போலவே, பசு குண்டர்கள் 6 பேரையும் விடுதலை செய்துள்ளது.

மாநில அரசின் இந்த நடவடிக்கை பெலு கான் குடும்பத்தினரையும், மனித உரிமை ஆர்வலர்களையும், அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பெலு கானை பசு குண்டர்கள் கொலை செய்யவில்லை என்றார், அவரது கொலைக்கு யார் காரணம்? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.எனது தந்தை உரிய அனுமதியுடன் பசு மாடு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்; ஆனால், பசு குண்டர்கள் எனது தந்தையை விரட்டி விரட்டி பெல்ட்டாலும், கட்டைகளாலும் அடித்தனர்; இரும்புக் கம்பிகளால் குத்தினர்; ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்; ஆனாலும், ஏப்ரல் 3-ஆம் தேதி இறந்து விட்டார்; அவரது சாவுக்கு நியாயம் கிடைக்கும்வரை நாங்கள் போராடுவோம் என்று 19 வயதே ஆன பெலுகானின் மகன், ஆரீப் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் தாத்ரி கிராமத்தில் 2015-ஆம் ஆண்டு முகமது அக்லக் என்ற முதியவரும், பசு குண்டர்களால் அடித்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. வழக்கு நடந்து வருகிறது. ஆனால், பெலு கான் வழக்கு குற்றவாளிகள் யார் என்று முடிவு செய்யப்படாமலேயே முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: