கோவை, செப்.15-
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தமிழக அரசின் கேளா காதுகளுக்கு பறையடித்து வெள்ளியன்று மாணவர் அமைப்புகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை பீளமேடுபுதூர் மைதானத்தில் வெள்ளியன்று இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து நீட் தேர்விற்கு எதிரான பறையடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாணவர் பெருமன்ற செயலாளர் மௌ.குணசேகரன், பூர்ணிமா, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார், செயலாளர் பிரபாகரன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வசந்தகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இதேபோல், கோவை தொண்டாமுத்தூரில் உள்ள ராமலிங்க கலைக் கல்லூரி மாணவர்கள் நீட்தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் சங்க நிர்வாகிகள் தினேஷ், பிரபு, மனோஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அனிதாவின் மரணத்திற்கு நீதிவேண்டும், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: