கோவை, செப்.15-
கோவை அன்னூரில் உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அன்னூர் கரியம்பாளையத்தில் சசூரி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணம் திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாணவர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையாக எந்தவித பதிலும் நிர்வாகத் தரப்பிடமிருந்து அளிக்கப்படவில்லை. மேலும், கல்விக் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டத் தவறினால் வாரம் ஒன்றிற்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாணவர்கள் ஒருநாள் கல்லூரிக்கு வராமல் விடுப்பு எடுத்தால் ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் மன உளைச்சளுக்கு ஆளாகினர். இதையடுத்து வியாழனன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்களிடம் பெற்ற அதிகப்படியான கட்டணத்தை திருப்பித்தர எழுத்துப்பூர்வமாக கல்லூரி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பேராசிரியர்களுக்கு சம்பள பாக்கி:
இதற்கிடையே, இக்கல்லூரியில் பணியாற்றிவரும் பேராசிரியர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து நிர்வாகத்திடம் ஊழியர்கள் முறையிட்டபோது, ஒவ்வொரு பேராசிரியரும் குறைந்த
பட்சம் 2 மாணவர்களையாவது கல்லூரியில் புதிதாக சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்காத பேராசிரியர்களுக்கு ரூ.40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகத் தரப்பில் பேராசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனால் பெரும் கொந்தளிப்பில் உள்ள பேராசிரியர்கள் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave A Reply