சென்னை,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கை ஏன் செலுத்தவில்லை என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  மனநல ஆலோசனை வழங்க குழு அமைக்க உத்தரவிடக்கோரியும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்தக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பல கருத்துகளை தொடர்ந்து தெரிவித்துவந்தார்.

இந்த வழக்கு மீண்டும் வெள்ளியன்று (செப். 15) நீதிபதி கிருபாகரன் முன்பு  விசாரணைக்கு வந்தபோது அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஓய்வு பெற்றவர்களுக்கு  வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள்  வழங்கப்படவில்லை என்றும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையைச் செலுத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி தான் ஆசிரியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதிய திட்டத்தில் அரசு தன் பங்கை செலுத்தாமல் இருந்தால் அதையும் இந்த நீதிமன்றம் கேள்வி கேட்கும்.

எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா, செலுத்தவில்லை எனில் ஏன் செலுத்துவதில்லை, அரசு தன்னுடைய தொகையை எப்போது செலுத்தும், 2003ஆம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு  ஓய்வூதியம் வழங்கப்பட்டதா,  வழங்கப்படவில்லை எனில் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட  கேள்விகளுக்கு தமிழக அரசு  திங்களன்று (செப். 18) பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: