எல்ஐசி வீட்டுவசதி  நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் உங்கள் இல்லம் வீட்டு வசதி  கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெள்ளியன்று (செப். 15) தொடங்கியது.

வரும்  17ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது.  கண்காட்சியை எல்ஐசி வீட்டுவசதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  வினய் ஷா  குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி  இலவசம்.

எல்லோருக்கும் பொருத்தமான பட்ஜெட் வீடுகள், மனைகள் முதல் உயர்தர ஆடம்பர குடியிருப்புகள் வரை 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் வீடு வாங்கவேண்டுமென்று விரும்பும் மக்கள், கண்காட்சியில்  அளிக்கப்படும் சலுகைகளை  பயன்படுத்தி கொள்ளலாம். இதோடு, வீடு வாங்க விரும்புபவர்களுக்கு, கண்காட்சி நடக்கும் அதே இடத்திலேயே எல்ஐசி ஹெச்எஃப்எல் நிறுவனம் அளிக்கும் கடனுதவிகளை எந்தவிதமான ப்ராசஸிங் கட்டணங்கள் இல்லாமல் பெறமுடியும். ஆயுதப்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையில் பணிபுரிவோர் மற்றும் ஒய்வுபெற்றோருக்கு  செப். 30 ஆம் தேதி 2017 வரை சிறப்பு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.

ரூ50ஆயிரம் கோடி கடன்வழங்க இலக்கு
நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயல் அதிகாரி  வினய் ஷா  எல்.ஐ.சி வீட்டுவசதி கழக நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ரூ.50ஆயிரம் கோடிக்கு கடன்களை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்தாண்டு  ரூ.41ஆயிரத்தி541 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டது என்றார். ஆண்டுக்கு நிறுவனம் 15விழுக்காடு வளர்ச்சி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2016-17 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தய லாபம்  ரூ.1931 என்றும் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.15ஆயிரம் கோடி வரை கடன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பண மதிப்பு நீக்க பிரச்சனையால் கடந்த நிதியாண்டில் 3வது காலாண்டில் வர்த்தகம் மந்தமாக இருந்ததாகவும் அவர் கூறினார். துவக்க நிகழ்ச்சியில் எல்ஐசி தென்மண்டல தலைமை மேலாளர் தாமோதரன், எல்ஐசி வீட்டுவசதி நிறுவனத்தின் சந்தையிடல் தலைமை மேலாளர் மகேஷ்,  பொதுமேலாளர் (நிதி) மண்டல மேலாளர் கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: