மதுரை;
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து, தேர்தல் ஆணையம் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது; இந்நிலையில் அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றிபெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுகவின் இரு தரப்பிலும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதால் முடிவெடுப்பத்தில் கால தாமதம் ஆகிறது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற சூழலில் அகிலேஷ் யாதவ் விவகாரத்தில் உடனடியாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “ உள்ளாட்சித் தேர்தல் வருவதால், கூடுதல் ஆவணங்களால் கால தாமதம் ஆகிறது என்பதைக் காரணமாக சொல்லாமல் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் ஒன்றை நிர்ணயித்து, அதைத்தொடர்ந்து இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Leave A Reply