பீடித்தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திடக் கோரியும் 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரியும், அகில இந்திய பீடித்தொழிலாளர் சம்மேளன  7வது மாநாடு வேலூரில் நடைபெற்று வருகிறது.

துவக்க நிகழ்வாக வியாழனன்று (செப். 14) நடைபெற்ற எழுச்சிப் பேரணியின் பொதுக்கூட்டத்தில்  கேரள மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  டி.பி. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகையில், “ மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் சிறுதொழில் நிறுவனங்க ளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் முதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்படுகிறது” என்றார்.

குறையும் பீடித்தொழிலாளர்கள்
கேரளத்தில் 2.5 லட்சம் பீடித்தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது 50,000 பேர் தான் உள்ளனர். கூட்டுறவு நிறுவனமான தினேஷ் பீடி கம்பெனியில் 42 ஆயிரம் பேர் இருந்த நிலையில் தற்போது 5000 பேர் தான் உள்ளனர். பல பீடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. 1960களில் நாடாளுமன்றத்தில் ஏ.கே.ஜி யின் போராட்டத்தால் கொண்டுவரப்பட்ட பீடித் தொழிலாளர்  நலச் சட்டம் கேரளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் அமலாக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பீடித்தொழிலை பாதுகாக்க பீடி பார்சல் தொழிலாளிகளுக்கு ரூ.355-ம் , பிற பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.370-ம் குறைந்த பட்சக் கூலியாக தரப்படுகிறது. இது போதாது, மேலும் உயர்த்தப்பட வேண்டும் என அரசு முயல்கிறது. மேலும், கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நட்டத்தில் இயங்கிய 13 பொதுத்துறை நிறுவனங் கள் லாபமீட்டும் முறையிலும், பல பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தை குறைக்கும் வகையிலும் இடது முன்னணி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெளி மாநில தொழிலாளர்கள்
பல மாநிலங்களில் பணிபுரியும் கேரளத்தவர் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என கேரள மக்கள் விரும்புவதைப் போல,  கேரளாவில் பணிபுரியும் 30 லட்சம் வெளி மாநிலத்தவர்களின் வாழ்க்கை மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 15 ஆயிரம் தரப்படுகிறது. எதிர்பாராத விதமாக மரணம் நேர்ந்தால் ரூ. 2 லட்சம் வரை தரப்படுகிறது.

கோவை அருகே உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கஞ்சிக்கோடு என்ற ஊரில் 640 வெளி மாநிலத் தொழிலாளர்கள் மிகக்குறைவான வாடகையில் தங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதே போல கோழிக்கோடு திருவனந்தபுரத்திலும் ஏற்பாடு உள்ளது. பிற மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த உள்ள இத்திட்டத் திற்கு நம்மவீடு என பொருள்படும் “அப்னா கர்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மக்கள் நலன் சார்ந்து திட்டங்கள் அமலாக்குவதற்கு இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாக கேரள இடது ஜனநாயக முன்னணி இருப்பது முக்கிய காரணம். தமிழகம்  உட்பட இந்திய மக்கள் இந்த இடதுசாரிப் பாதையை நோக்கித் திரும்புவது தான் ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் ராமகிருஷ்ணன் கூறினார்.

விலை பேசப்படும் நீதி!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,“தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, பெற்ற உரிமைகளை  பறிகொடுக்காமல் தடுத்திட பெரும் களப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு, அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தர வால் அனைத்து வாகன ஓட்டுநர்கள் போராட்டம் என களம் சூடுபிடித்துள்ளது.

சேலம் ஸ்டீல் பிளாண்டை அப்படியே தனியாருக்கு  விற்பது என மத்திய மோடி அரசு செய்யும் முயற்சியை எதிர்த்துh போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுத்துறை பாதுகாப்பு என்பது தமிழகத்திற்கே உரிய சமூக நீதியை பாதுகாப்பதாகும். போராட்டங்களே தவறு என தற்போது நீதிமன்றங்கள் தீர்ப்பு கூறுகின்றன. அதிமுக பொதுக்குழு கூட்டலாம் என சென்னை உயர்நீதி மன்றமும், கூட்டுவது தவறு எனப் கர்நாடகா உயர்நீதிமன்ற மும் கூறுகின்றன. இதில் எது சரி? நீதிமன்ற நீதிதேவதையின் கண்ணில் கருப்புத்துணி கட்டப்பட்டதன் நோக்கம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. நீதி விலை பேசப்படுகிறது. தற்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் விலை தமிழகத்தில் 20 கோடி எனப் கூறுகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் 1 லட்சத்து 5 ஆயிரம் என அவர்களாகவே நிர்ணயித்துப் கொள்கிறார்கள். ஆனால், பீடித்தொழிலாளர்களின் கூலியை உயர்த்த மறுக்கிறார்கள்.

மாலதி சிட்டிபாபு
பீடித்தொழிலில் பெண் தொழிலாளர்கள் உழைப்பு கடுமையானது. தமிழ்நாட்டில் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இம்மாநாடு நடைபெறுகிறது. அதிமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக பொய்யான நம்பிக்கை தந்ததாலும் மத்திய பாஜக அரசு துரோகம் இழைத்த தாலும் அனிதா மரணம் நிகழ்ந்ததது. ரேசன் கடைகளில் ஊழ, ‘ விலை வாசி’ உயர்வு பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது போன்றவற்றை முன்னிறுத்தி டில்லியில் நவம்பர் 9,10,11 தேதிகளில் மகாபாரத இயக்கம் நடைபெறுகிறது. டில்லியை செம்மயமாக்க  பீடித்தொழிலாளர்களும் களமிறங்கிட வேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: