===பெரணமல்லூர் சேகரன்===                                                                                                                                           மக்கள் விடுதலை ராணுவம் (PLA) பல முனைகளுக்குச் சென்று, எதிரிகளின் ராணுவத்தை ஒன்றன்பின் ஒன்றாக தகர்த்தது. சியாங்கே ஷேக் ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு, போர்க் கைதிகளாக நடத்தப்படுவதற்கு பதிலாக, அவர்களின் விருப்பத்துடனேயே மக்கள் விடுதலை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, கோமிண்டாங் ராணுவத்தை எதிர்த்துப் போரிட வைத்தனர். 1948-இல் படைபலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஜூலை 1946-இல் கோமிண்டாங் ராணுவம் 43 லட்சம் பேர்; மக்கள் விடுதலை ராணுவத்தில் 12 லட்சம் தான். ஆனால், 1949 இறுதியில் கோமிண்டாங் படைபலம் 29 லட்சமாக குறைந்தது. ஆனால் செஞ்சேனை 30 லட்சத்திற்கும் அதிகமாக வளர்ந்துவிட்டது.

ராணுவ பலம், மக்கள் பலம், கொள்கை பலம் ஆகிய மூன்றும் சீனக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதகமாக மாறியிருந்ததாலும், சோஷலிச நாடான சோவியத் யூனியனின் ஆதரவும், உதவியும் இருந்ததாலும், புரட்சி வெகு விரைவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தது.

1949, ஜனவரியில் ப்ளா பீகிங் மாநகரத்தை போரிடாமலேயே கைப்பற்றியது. அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் வளைத்துப் பிடித்தது. சியாங்கே ஷேக்கின் ராணுவம் பல பகுதிகளில் நிலைகுலைந்து போரைத் தொடர்ந்து நடத்துவதற்கான ஆர்வத்தை இழந்தது. இவ்வாறு நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் சீனப் புரட்சி, சீரிய தளபதி மாசேதுங் தலைமையில் மாபெரும் வெற்றியினைப் பெற்றது. 1949, அக்டோபர் முதல் நாளன்று பீகிங்கை தலைநகராகக் கொண்டு மாசேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைந்தது.மாவோவின் காலத்தில் சீன குடிமக்களின் வாழ்க்கைத் தரம் பல மடங்கு உயர்ந்தது. இந்தியாவை விட பல மடங்கு மோசமான நிலையிலிருந்த சீனா குறுகிய காலத்தில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, வேலை நிரந்தரம் பணி பாதுகாப்பு, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ததுடன், பெரும் தொழிற்சாலைகளையும், சிறு தொழிற்சாலைகளையும், கிராம அளவில் புறக்கடை பட்டறைகளையும் கட்டியமைத்து சீனாவை ‘முற்றிலும் விவசாய நாடு’ என்ற நிலையிலிருந்து தொழில் சார்ந்த நாடாக படு வேகத்தில் வளர்ந்தது.

1959-61 காலகட்டத்தில் மாவோவினுடைய பொருளாதாரக் கொள்கைகள் சீனாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியதாகவும் அதில் ஒன்று இரண்டல்ல, பல கோடிக்கணக்கில் மக்கள் மாண்டு போனதாகவும் அவதூறு கிளப்பினார்கள். இவர்களின் வண்டவாள புளுகுகளைப் பார்க்கும் முன்பாக சீனா அந்த காலகட்டத்தில் நிகழ்த்திய சாதனைகளைக் கொஞ்சம் பார்ப்போம்.
இவர்கள் பஞ்சம் நிகழ்ந்து பலர் இறந்ததாகக் கூறும் காலகட்டத்தில் தான்(1949-78) சீனா தனது உணவு தானியம் உற்பத்தி செய்யும் நிலப்பரப்பை 145.9சதவீதமும், உணவு தானிய உற்பத்தியை 169.6சதவீதம் உயர்த்தியது.

இதே காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 77சதவீதமாக உயர்ந்தது. ஆக சீனாவின் ஒவ்வொரு குடிமகனுக்குமான உணவின் பங்கு அபரிமிதமாக உயர்ந்தது இந்த காலகட்டத்தில் தான். விவசாயத் துறையில் இவ்வளவு வளர்ச்சி இருந்தது எனில் ஏற்கெனவே பின் தங்கி போயிருந்த தொழிற் துறையில் ஆண்டு சாராசரி வளர்ச்சி 11.2சதவீதமாக இருந்தது இந்த காலகட்டத்தில்தான்.

1952 சீனா விடுதலை பெற்ற போது நாட்டின் மொத்த உற்பத்தியில் 36சதவீதமாக இருந்த தொழிற்துறை 1975-இல் மாவோ மறைந்த பொழுது 72சதவீதமாக இருந்தது. விவசாயத் துறை 28சதவீதமாக இருந்தது. இத்தனையும் விவசாயத் துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியை உள்ளடக்கியது எனில் இந்த அசுர வளர்ச்சி வேகத்தை புரிந்து கொள்ள முடியும். இதனை பஞ்சம் என்று இவர்கள் அவதூறு செய்வதில் எந்த ஒரு நேர்மையான நோக்கத்தையும் காண முடியவில்லை.

விவசாயத்துறையிலும் பல மடங்கு வளர்ச்சி, தொழிற்துறையில் அதீதமான வளர்ச்சியை சாதித்துக் காட்டிய மாவோவின் சீனாவை பற்றி பேச இந்தியாவுக்கு என்ன அருகதை உள்ளது? இந்த வலுவான சோசலிச கட்டுமானத்தின் பலத்தில்தான் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா சவால்மிக்க உலகமயக் கொள்கையை வரையறைக்குட்பட்டு அமல்படுத்தி முன்னேறி வருகிறது.

‘இரண்டு கால்களில் நடப்பது’ என்ற முழக்கத்தின் கீழ் வறிய நாட்டுப்புற சீனாவை தொழில் நாடாக மாற்று கிறார் மாவோ. கனரக பெரிய தொழிற்சாலைகளை கட்டும் அதே நேரத்தில் இணையாக சிறு தொழிற்சாலைகளை கிராமப்புறத்தில் கட்டுவது என்பதைத்தான் அந்த முழக்கம் சுட்டுகிறது. நாட்டின் வண்ணத்தை மாற்றும் தொழில் புரட்சியாக இல்லாமல் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சியையும், பண்பாட்டு வளர்ச்சியையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருப்பதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டார் மாவோ. இதுதான் ஏழை மாணவனின் விஞ்ஞானி கனவை நனவாக்கியது.

ஆரம்ப காலங்களில் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்ட ‘புறக்கடை இரும்பு உலைகள்’ என்ற முறையில் தரம் குறைந்த இரும்பே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் விவசாயி களை தொழில் முனைவோர்களாக அனுபவம் பெறுவதற்குமான வாய்ப்பையும் இது வழங்கியது. மாவோ, தான் பாய்ந்து கடக்க விரும்பியவையாக குறிப்பிடும் விசயங்களில் முக்கியமான ஒன்று ‘மக்களின் மனோபாவம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி’ என்பதும் ஒன்றாகும். இதனை ஈடேற்றும் வகையிலேயே இது போன்ற முறையில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. சில ஆரம்ப கட்ட பின்னடைவுகள், தோல்விகளுக்குப் பிறகு குறுகிய காலத்திலேயே இந்த பாடங்கள் பயனளிக்கத் துவங்கின. சீனா சாதித்துக் காட்டியது.

சீனா தனது மனித வளத்தையும், மக்கள் புரட்சியின் வெற்றியில் பெற்றிருந்த உற்சாகத்தையும் மட்டுமே மூலதனமாக இட்டு சீனாவின் பொருளாதாரத்தை சுதந்திரமான தன்னிறைவு பொருளாதாரமாக உயர்த்தி சாதனை படைத்தது.

மாவோவின் பிரபலமான ‘மக்கள், மக்கள் மட்டுமே அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்’ என்ற வரிகள் வெற்று முழக்கமாக இல்லாமல், நடைமுறையிலும் அவர் பின்பற்றிய விஷயமாக இருந்தது. சீனாவின் தொழில் வளர்ச்சியாகட்டும், எதிர்ப்புரட்சி கும்பலின் அழிவு வேலைகளுக்கு எதிரான போராட்டமாகட்டும், கொசு ஒழிப்பு போராட்டம் முதல் சீனாவின் துயரமான மஞ்சள் ஆற்றை கட்டுப் படுத்துவதாகட்டும் அவர் மக்களை அணி திரட்டியே செய்தார்.ட பெரணமல்லூர் சேகரன்

 

Leave A Reply

%d bloggers like this: