புதுதில்லி;
அகதிகளாக வரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.மியான்மரில் சிறுபான்மையாக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் இன அடிப்படையிலான அடக்குமுறையைக் கையாண்டுள்ளது. அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடூரமாக வேட்டையாடப்பட்டு வருகின்றனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற வித்தியாசம் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இதனால் லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர்.

புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் மட்டும் 14 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஐ.நா. அகதிகளுக்கான உரிமை ஆணையத்தில் பதிவு செய்து கொண்டு தங்கியுள்ளனர் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், தற்போது இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் ஜைத் ராத் அல் உசைன் கடந்த திங்கட்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தியா ஒட்டுமொத்தமாக எல்லோரையும் வெளியேற்ற முடியாது; அதேபோல சித்ரவதை செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள நாட்டுக்கே மீண்டும் அகதிகளை திருப்பி அனுப்பி வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.அவருக்குப் பதிலளிக்கும் வகையில், “ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் இந்தியாவை வில்லனாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது” என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறினார்.

அத்துடன், அடைக்கலம் தேடி அகதியாக இந்தியா வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை திருப்பியனுப்பும் பணியில் மத்திய பாஜக அரசானது தீவிரமாக இறங்கியது.
இதையடுத்து தங்களுக்கு கருணை காட்டக்கோரி 2 ரோஹிங்கியா முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு பதிலளிக்குமாறு ஏற்கெனவே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் மத்திய அரசு தமது நிலையை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. அதில், பயங்கரவாத அமைப்புடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தொடர்புள்ளது என்றும், இதுதொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையால் ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.மேலும், அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இதையே ஐ.நா.விற்கான இந்திய பிரதிநிதி ராஜீவ் சந்தரும் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களைப் பற்றி ஏனைய நாடுகளைப் போலவே இந்தியாவும் கவலை கொண்டுள்ளது; குறிப்பாக நாட்டின் பாதுகாப்புக்கு அவர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று ராஜீவ் சந்தர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: