நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கம்,இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதனன்று (செப்) இரவு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னையில் பல இடங்களில் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.  வடசென்னை, தென் சென்னை மாவட்டங்களில் பல இடங்களில் பள்ளி,  கல்லூரி மாணவர்கள் , இளைஞர்கள் தன்னெழுச்சியாக இப்போராட்டங்களில் கலந்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை பல இடங்களில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது.  குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது. பெண்கள், மாணவர்கள் என்றும் பாராமல் தாக்கியதோடு தகாத முறையில் நடந்துகொண்டது.

இளைஞர்களை கிரிமினல்கள் போல் நடத்தினர். சட்டைகளை கிழித்தெறிந்தனர். பெண்களின் தோள் பட்டை எலும்பு விலகும் அளவிற்கு தாக்கினர்.
கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது  143, 188, 353, , 7(1)ஏ, 75 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர் சங்க மாநிலத் தலைவர்  வி.மாரியப்பன்,  வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எம்.செந்தில், வடசென்னை மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்திக், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.தாமோதரன், மாணவர் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் என்.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச்  செயலாளர் கே, நிருபன், மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுகைப் முஜாகித், ராஜேந்திரபிரசாத், கு.மணி, எஸ்.சுபாஷ்சந்திரபோஸ் ,  விக்னேஷ், மாணிக்கம்,  வாலிபர் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், சதீஷ், ஜான், ஜேரிஸ்,  டி.லெனின், த.பாலாஜி, ஜா.யூஜின், கே.ராஜேஷ்,  எம்.விக்னேஷ்வரன், சி.பி.வினோத், பி.பிரகாஷ், வெங்கடேஷ், பி.முருகன், பி.ஆர்.முரளி, ரா.பிரகாஷ் , ஆர்.கோதணடராமன், எஸ்.ஆதி  மற்றும் பிரின்ஸ்(திக), அருண்(லயோலா) ஆகியோர் புதனன்று இரவு புழல் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, பிரதாபன்கே,முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் இளைஞர்களின் பிணைக்கு உதவினர்.
விடுதலையான வாலிபர், மாணவர்களுக்கு சிறை வாயிலில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் பாலா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave A Reply