===பெரணமல்லூர் சேகரன்===
நெடும் பயணத்தில் புகைப்பிடிப்பதென்பது ஒரு ஆடம்பரம் என்று கருதப்பட்டதால் மாவோ அந்த வழக்கத்தைத் துறந்தார்.அவர் பயணம் தொடங்கியபோது அவர் மலேரியாவிலிருந்து ஓரளவு குணமாகிக் கொண்டிருந்தார். அவருடைய வீரர்களில் ஒருவர் அவர் நலிந்து, மெலிந்து போயிருந்தார் என்று விவரித்தார். மாவோ ஓய்வுக்காக ஒரு தூக்குப் படுக்கையில் எடுத்துச் செல்லப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தனது சக தோழர்களோடு நடந்தே சென்றார்.
பயணம் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இருந்தனர். அவர்கள் கட்சி மற்றும் அரசின் உயர்ந்த பதவிகளில் இருந்தோரின் மனைவியர் ஆவர். பிற பெண்களும், மாவோவின் இரு குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளும் விவசாயக் குடும்பங்களிடையே விட்டுச் செல்லப்பட்டனர். அவர்களைப் பிறகு கண்டு பிடிக்கவே முடியவில்லை.
பயணம் தொடங்கிய போது, மாவோவின் துணைவி
யார் ஹோ ஜூ சென் கருவுற்றுச் சில மாதங்கள் ஆகியிருந்தன. பயணத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே அவர் குண்டு தாக்குதலில் காயமடைந்தார். அவருடைய உடலில் 25 குண்டுத் துகள்கள் இருந்தன.
லி ஃபு சன்னின் மனைவி சாய் சேங், சூ என் லாயின் மனைவி டெங் யிங் காவோ ஆகியோர் நெடும் பயணத்தில் இருந்த புகழ் பெற்ற பெண்மணிகள் ஆவர். இருவரும் காச நோயால் துன்புற்றனர். படை வீரர்களில் ஒருவர் இந்த நெடும்பயண வழியைப் பற்றி பின்வருமாறு நினைவு கூர்கிறார்: “நாங்கள் குறுகிய, அபாயமிக்க பாதைகள் வழியாக, குறுகிய கணவாய்கள் வழியாக, குறுகிய பாலங்கள் வழியாகக் கடந்து செல்லும்போது அல்லது பனி சில்லிடும் நீரோட்டங்களை நீந்திக் கடக்கவேண்டியிருந்த போது, மிக மோசமான சோதனைகளை எதிர்கொண்டோம். அதுபோன்ற சமயங்களில் எங்களது முன்னோடிப் படை வேகம் குன்றும்;பின்புலப் படையோ ஓரடி முன்வைத்தால் பத்தடி நின்று கொண்டேயிருக்கும். எங்களால் முன்னேறிச் செல்ல முடியாது அல்லது அமர்ந்து ஓய்வெடுக்க முடியாது. சில வீரர்கள் நின்றவாறே உறங்கி விடுவார்கள்.
சில சமயங்களில் சீற்றத்துடன் வரும் புயல் காற்றினூடே எங்கள் உடல்களின் மீது மழை சாட்டையாய் விளாச நாங்கள் அணிவகுத்துச் சென்றோம். இந்தச் சூழ்நிலைகளில் நாங்கள் எங்கள் கைவிளக்குகளைப் பயன்படுத்த முடியாது; பாதைகளோ வழுக்கிக் கொண்டு அபாயகரமானவையாக இருந்தன. சில சமயங்களில் நாங்கள் இரவில் குறைந்த தூரமே நடந்தோம். மழையில் நனைந்து இரவெல்லாம் வெட்டவெளியில் கழிக்க நேரிட்டது. மலைப் பாதையின் அகலம் இரண்டடிக்கும் மேல் எங்குமே இல்லை. ஒருவர் எப்படியாவது அந்தப் பாதையில் படுத்துவிட்டு, திரும்ப முனைவாரானால் மலைச் சரிவில் உருண்டு செல்வதைத் தவிர்க்க முடியாது. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய கற்பாறைகள் துருத்திக் கொண்டிருந்தன. பாதைகூட கூரிய கற்கள் நிறைந்ததாக இருந்தது”.
அசைக்க முடியாத இலட்சிய வெறியோடும், உறுதியான மனநிலையோடும்                                                                    நெடும்பயணத்தில் கலந்து கொண்ட வீரர்களுக்கு கொடிய அனுபவங்களாக நேர்ந்த உடல் உபாதைகள் குறித்து நெடும்பயணத்தில் கலந்து கொண்ட மருத்துவர் நெல்சன் ஃபு என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “நெடும்பயணத்தின்போது எங்களில் மிகப் பலருக்கு இதய நோய் வந்தது. மேலும் பலருக்கு அதிக மனஅழுத்தத்தின் காரணமாக நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டன. நெடும்பயணம் முடிவுற்ற உடனேயே எங்களில் எண்ணற்றோருக்கு கால்களிலும், பாதங்களிலும் புண்கள் ஏற்பட்டன.மோசமான நிலைமைகள் காரணமாகவும், காயங்கள் காரணமாகவும், பொதுவான ரத்தசோகை காரண மாகவும் அப்புண்கள் ஏற்பட்டன.”
“நெடும்பயணத்திற்காக ஆயிரம் டாலருக்கு மட்டுமே மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளை எங்களால் வாங்க முடிந்தது. க்யாங்சி, க்வாங்டங் மற்றும் ஹூனானில் மலேரியா, வயிற்றுப்போக்கு ஆகியவை முதன்மையான துன்பங்களாக இருந்தன; ஸ்ஜெகவான், கான்சு மற்றும் ஷென்சியில் வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் இன்ஃப்ளுவென்சா ஆகியவையும், சிகாங்கில் மலைநோய், செரியாமை, டைபாய்டு மற்றும் ஒருவகைக் கண்நோய் ஆகியவையும், ஷென்சியில் காலரா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களும், யூனானில் அயோடின் குறைவால் தைராய்டு தொல்லைகளும் பெருந்துன்பங்களாய் அமைந்தன. அமெரிக்க செய்தியாளர் எட்கர் ஸ்நோ என்பவர், சீனாவின் மீது ஒரு சிவப்பு நட்சத்திரம் என்ற தனது நூலில் நெடும்பயணத்தின் சில பகுதிகளை பின்வருமாறு விளக்குகிறார்: “சாகசம், ஆராய்ச்சிப் பயணம், கண்டுபிடிப்பு, மனிதத் துணிச்சல் மற்றும் கோழைத்தனம், களிப்பு மற்றும் வெற்றி, துன்பம், தியாகம் மற்றும் விசுவாசம், இவையெல்லாம் கடந்து மனிதனிடமோ, இயற்கையிடமோ, கடவுளிடமோ, மரணத்திடமோ தமது தோல்வியை அனுமதிக்காத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சவாலைப் போன்ற மங்கா மனவெழுச்சி, இறவா நம்பிக்கை மற்றும் வியத்தகு புரட்சிகர நன்னம்பிக்கை இவையெல்லாமும், இன்னும்கூட பலவும், நவீன காலங்களில் இணையற்றதானதொரு இந்த நெடும்பயணத்தின் வரலாற்றில் புதைந்து கிடப்பதாகத் தெரிகிறது.”
நீண்ட பயணத்தின் சோதனைகளைக் கண்டு செஞ்சேனை அஞ்சவில்லை
ஆயிரம் மலைகளையும் நதிகளையும் அது ஒரு பொருட்டாகக் கருதவில்லை
– என்று நெடும்பயணத்தின்போது இயற்றிய கவிதை ஒன்றில் மாவோ குறிப்பிட்டிருந்தார்.
நெடும்பயணத்தின் வழியில் 1935, ஜனவரி மாதத்தில் கட்சியின் தலைவராக மாசேதுங் நியமிக்கப்பட்டு, மத்தியக் கமிட்டி மற்றும் செஞ்சேனை ஆகியவை மாசேதுங் தலைமையில் கொண்டு வரப்பட்டன. பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு காணவேண்டும் என்ற நோக்கத்துடன் மாசேதுங், சியாங்கே ஷேக்குடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். 1946, ஜூலைக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.