மத்திய அரசின் மக்கள் விரோத, மதவெறிக் கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் சிறப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா,  சிஐடியுவின் பொதுச் செயலாளர் கே. ஹேமலதா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவலே, மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த அமர்ஜீத் கவுர், அதுல் குமார் அஞ்சான், ராஜீவ் டிம்ரி சத்யவான், மனோஜ் பட்டாச்சார்யா, டாக்டர் சுனிலம், அனில் சௌத்ரி, நிகில் தேய், அன்னி ராஜா, கவிதா கிருஷ்ணன், திருமலை, விக்ரம் சிங், கௌதம் மோடி, கே. மதுரேஷ் குமார், ரோமா மாலிக் மற்றும் பி. கிருஷ்ணபிரசாத் கையெழுத்திட்டு ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு, எதேச்சாதிகாரக் கொள்கைகளின் காரணமாக அனைத்துப் பகுதி மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அரசாங்கம் தன்னுடைய தவறான கொள்கையின் காரணமாக அதன் சுயரூபம் மக்களுக்குத் தெரியத் தொடங்கி இருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு சாமானிய மக்களின் வாழ்க்கையில் பேரழிவினை ஏற்படுத்தி இருக்கிறது. 2016ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.9 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2017ஆம் ஆண்டில் அதே கால அளவில் 5.7 சதவீதமாக வீழ்ச்சி  அடைந்து, அதன் விளைவாக சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் விண்ணை நோக்கி விரைந்துகொண்டிருப்பதால், அதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சாமானிய மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக உழைக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்துள்ள சேமிப்புகூட கரைந்துகொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி திணிப்பால் சிறு உற்பத்தித் தொழில் அழிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது.

வேளாண்மைத்துறையிருந்து ரயில்வே துறை உட்பட, ஏன் பாதுகாப்புத்துறையும் கூட, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்தில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசால் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அவர்கள் மத்தியில் அமைதியின்மை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மண்ட்சோர் என்னுமிடத்தில் போராடிய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதும், இதில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டதும், மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் நடந்ததும் இதைத்தான் காட்டுகிறது. கல்வியும் சகாதாரமும் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டு வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான தாக்கத்தை சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் அனுபவித்து வருகிறார்கள்.

ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமையிலான வலதுசாரி எதேச்சாதிகார சக்திகள், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தைத் திசைதிருப்பும் விதத்தில், மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்தில்  வெறுப்பு பிரச்சாரத்தையும், ரவுடிகள் மூலமாக வன்முறை வெறியாட்டங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டிருப்பது இதன் சமீபத்திய நிகழ்வாகும். இக்கொலையானது, நாட்டின் ஜனநாயக அரசியலுக்கும், பேச்சுரிமைக்கும், குடிமக்களின் உயிர்பாதுகாப்புக்கான உரிமையையும் ஏற்பட்டுள்ள கடும் அச்சுறுத்தலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் எதேச்சாதிகார மற்றும் பிரிவினைவாதக் கண்ணோட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விதத்தில் நீதிமன்றங்கள் அந்தரங்கத்திற்கான குடிமக்களின்  அடிப்படை உரிமைகள் குறித்தும்,  கால்நடை வர்த்தகம் தடை குறித்தும், தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவனான ராம்  ரகிம் குர்மீத்திற்குத்தண்டனை விதித்தும் பிறப்பித்துள்ள தீர்ப்புரைகள் ஆக்கபூர்வமான அடையாளங்களாகும்.

இந்திரா காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உட்பட வலதுசாரி எதிர்க்கட்சிகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதைக் கைவிடுவதற்கும், மக்கள் மீதான வாழ்வாதாரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை எதிர்த்திடவும் தயாராயில்லை.

இந்தப் பின்னணியில்தான் அகில இந்திய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகள் இணைந்து பிரச்சனைகளின் அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது இன்றைய அவசியத்தேவை என்று உணர்ந்துள்ளன. இந்த அடிப்படையில் இடதுசாரி மற்றும் ஜனநாயக வெகுஜன, வர்க்க மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் இணைந்து, “ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன்” (மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரத்திற்கான முன்னணி)  என்ற பெயரில் ஓர் ஒன்றுபட்ட மேடையை உருவாக்கி இருக்கின்றனர். மக்கள் மத்தியில் ஒரு விரிவான ஒற்றுமையை உருவாக்கிட இது முயலும். இதனையொட்டி வரும் 2017 செப்டம்பர் 18 அன்று ஓர் அகில இந்திய சிறப்பு மாநாடு புதுதில்லியில் உள்ள மாவலங்கார் கூடத்தில் நடைபெறுகிறது.

சிறப்பு மாநாடு, அகில இந்திய அளவில் மற்றும் மாநிலங்கள் அளவில் நூற்றுக்கும் மேலாக இயங்கிடும் அனைத்து அடிப்படை இயக்கங்களையும் ஒருங்கிணைந்திட வசதி செய்துகொடுக்கும். ஜனேஜா (JANEJAA) அமைப்பானது, நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் எதேச்சாதிகாரம் மற்றும் மதவெறிக்கு எதிராகப் போராடும்

இடது, ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களையும் இம்மேடைக்குக் கொண்டுவர முயலும்.

சிறப்பு மாநாட்டில் நடப்பு சமூக அரசியல் மற்றும் பொருள்தார நிலைமை குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். நவம்பர் 9,10,11 தேதிகளில் நாடாளுமன்றத்தின் முன் மாபெரும் தர்ணா நடத்திடவும் 2017 செப்டம் 20 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்திடவும் தீர்மானித்திடும்.

இவ்வாறு அந்த பத்திரிகை செய்தில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.)

 

 

Leave A Reply