திருப்பூர், செப். 14-
அவிநாசி அருகே நாதம்பாளையம் கிராமத்தில் அரசுப்பேருந்து முன் கூட்டியே இயக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:- நாதம்பாளையம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விசைத்தறி, பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். எங்கள் பகுதி குழந்தைகள் அவிநாசிக்குச் சென்று படித்து வருகின்றனர். எங்களுக்கு வாகராயம்பாளையத்தில் இருந்து நாதம்பாளையம் வழியாக திருப்பூருக்கு காலை நேரத்தில் 8.10-க்கு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சிலநாட்களாக இப்பேருந்து முன் கூட்டியே 7.50-க்கு இயக்கப்படுகிறது.

இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் வியாழனன்று காலை திரண்ட கிராம மக்கள் நாதம் பாளையத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்தனர். இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போக்குவரத்துதுறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வழக்கம்போல் 8.10 மணிக்கு இயக்க உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave A Reply