நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலிபர்கள், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை தகர்க்கும்  வகையில் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்   அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கததின் சார்பில் மாவட்டம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள், கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு  உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புதனன்று சித்தாமூர் கூட்டு சாலையில் வாலிபர், மாணவர் அமைப்புகள் சிஐடியு இணைந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் போராடும் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் காவல் துறையை கண்டித்தும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்கத்தின் மதுராந்தகம் கோட்டத் தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தமிழன், விவசாயிகள் சங்கத்தின் செய்யூர் வட்டச் செயலாளர் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட பலர் பேசினர்.

படாளம்
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்டுச் சாலையில் வாலிபர் மாணவர் சங்கங்களின்  சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வாலிபர் சங்கத்தின் ஒன்றியப் பொருளாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் வாலிபர்களும் மாணவர்களும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், மாதர்பாக்கம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர்  பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். நல்லரசு தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தேவா, மாவட்டச் செயலாளர் என். கங்காதரன், மாவட்ட துணை நிர்வாகிகள் மோசஸ்பிரபு, சண்முகசுந்தரம், குமரேசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ஆகியோர் பேசினர்.
மாதர்பாக்கம் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பகுதிச் செயலாளர் ப.லோகநாதன், மாவட்டத் தலைவர் எஸ். தேவேந்திரன் உட்பட பலர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: