அகமதாபாத்;
ஜப்பான் நாட்டின் உதவியுடன் தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் தொழில் நகரம் அமைக்கப்படும் என்று குஜராத்தில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, புதனன்று மாலை இந்தியா வந்தார். அவருக்கு இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத் மற்றும் மும்பை இடையிலான முதல் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் வியாழக்கிழமையன்று காலை துவக்கி வைத்தனர்.

திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய ஷின்சோ அபே, இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான இந்த உறவு மற்ற அரசுகளுக்கு இடையேயான உறவைக் காட்டிலும் தொலைநோக்கு பார்வையைக் கொண்ட ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியில் இந்திய – ஜப்பான் நாட்டின் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் முக்கியத் திட்டமாக தமிழகம், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் என 4 மாநிலங்களில், ஜப்பான் நாட்டின் உதவியுடன் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

சாலை, ரயில், ஆகாயப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

Leave A Reply