சேலம்,செப். 14-
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதனை கண்டித்து, உருக்காலை தொழிலாளர்கள் கடந்த ஒரு வருடமாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உருக்காலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக வியாழனன்று சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, சேலம் உருக்காலை இரண்டாவது நுழைவு வாயில் முன்பிருந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேரணியாக சென்றனர்.  இதன்பின் மூன்றாவது நுழைவு வாயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர் செல்வம், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், காங்கிரஸ் மாநகர மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், பாமாக துணைத்தலைவர் லட்சுமணன், வடமலை உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave A Reply