தமிழக சட்டப்பேரவையில் செப். 20ம் தேதி வரை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி   பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வியாழனன்று (செப். 14) துவங்கியது.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், ‘‘பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கு உத்தரவிட வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநர் இதற்கு காலம் தாழ்த்துவது ஏன்? முதல்வரும், ஆளுநரும் கூட்டாக சேர்ந்து ஒரு அணியாக செயல்படுகின்றனர் என்றார்.

திமுகவை சேர்ந்த 21 மற்றும் அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் 19 பேர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது’’ என்றும் அவர் கூறினார்.
இந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, நாங்களும் இதில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.

இதனையடுத்து நீதிபதிகள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் பேரவைச் செயலாளரிடம் கேட்டுத்  தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞரிடம் கூறினர்.

மதியம் 2 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கி விட்டது. நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. பேரவைத் தலைவர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.

இதனையடுத்து தகுதி நீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிகள் நடக்கிறது என்று திமுக மற்றும் தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செப். 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என தெரிவித்தனர். இது தொடர்பாக, சபாநாயகர், ஆளுநரின் செயலாளர், சட்டப்பேரவைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

குட்கா வழக்கு
குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து வரும் அக். 12ம் தேதி முடிவு செய்வதாகவும், அதுவரை பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: