சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில், கொலை செய்து, புதைக்கப்பட்ட வாலிபர் உடல் வட்டாட்சியர்  முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே, பிரேத பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது.

சாத்தாங்காடு, ஜோதிநகர் , 8வது தெருவை சேர்ந்தவர் அஜய்குமார், இவர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அவினாஸ் பூசன் (28), ஐ.டி.ஐ படித்த இவர், கடந்த 7ம் தேதி அன்று, வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.  இது தொடர்பாக, சாத்தாங்காடு காவல் நிலையத்தில், அஜய்குமார், புகார் அளித்தார். இந்த நிலையில், அவினாஸ் பூசனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ. 50 லட்சம் கேட்டும் மர்ம நபர் ஒருவர், அஜய்குமாரை, செல்போனில் மிரட்டினார். இது தொடர்பாகவும், அவர், புகார் அளித்தார். துணை ஆணையர் கலைச்செல்வம் மேற்பார்வையில், உதவி ஆணையர் தினகரன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.  அப்போது, மர்ம நபர் பேசிய, செல்போன் டவரை வைத்து  இரண்டு பேரை பிடித்தனர். அவர்கள், சடையங்குப்பம், பர்மா நகரை சேர்ந்த கஞ்சாவியாபாரி வெங்கடேசன், ரமேஷ் என தெரியவந்தது. இதில், வெங்கடேசன், அவினாஸ் பூசனின் நண்பர் ஆவார். சம்பவத்தன்று, அவினாஸ் பூசன், வெங்கடேஷ் உள்ளிட்டோர், சடையங்குப்பம் பகுதியில்,  மது அருந்தியுள்ளனர். போதையில் ஏற்பட்ட தகராறில், அவினாஸ் குமாரை அடித்துக்கொன்று, அவரின், உடலை, அங்குள்ள  ஒரு மைதானத்தில் புதைத்து விட்டனர்.

மேலும், வழக்கை திசை திருப்ப, அவினாசை கடத்தியதாக நாடகமாடியுள்ளனர் .  இதை தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார், சடையங்குப்பம் பகுதிக்கு நேற்று அழைத்து சென்றனர். அங்கு, அவினாஸ் புதைக்கப்பட்ட  இடத்தை காண்பித்தனர். பின்னர், வட்டாட்சியர் செந்தில் நாதன், துணை ஆணையர் கலைச் செல்வம் முன்னிலையில், அவினாஸ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரியதர்சினி, கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர், அவினாஸ் உடலை அங்கேயே  பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவினாஸ் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில், சடையங்குப்பம் பகுதியை சேர்ந்த சூரியா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: