இந்தியாவில் அனைவருக்கும் வீட்டுவசதியை ஏற்படுத்தி தருவதற்கான பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டம் தமிழகத்தில் அரசியல் மற்றும் நிர்வாக குழப்பங்களால் நிலைகுலைந்து உள்ளது. இந்த திட்டத்தின் படி கடந்த 2016ஆம் ஆண்டில் முடிக்கவேண்டிய பணிகளே தேங்கியுள்ள நிலையில் இந்தாண்டு 2017க்கான புதிய இலக்கை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் பயனாளிகள் தேர்வு முதல் மணல்,சிமெண்ட் வரையிலான பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு ஏற்படுத்தினால்தான் இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றமுடியும் என்று ஊரக வளர்ச்சி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு 2022க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற லட்சியத்தை எட்டுவதற்காக பாரதப் பிரதமரின் வீடுகட்டும் திட்டம் என்ற இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2017-18ல் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 214 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கட்டப்படும் வீட்டுக்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மானியம் வழங்கும். தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட பணிகளே இன்னும் நிறைவடையவில்லை. குறிப்பாக பயனாளிகள் தேர்வில் குளறுபடி, மணல், சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற பிரச்சனைகளால் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இப்போது வரை எட்டப்படவில்லை.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங்களிடம் கேட்டால் அனைவருக்கும் வீட்டுவசதி வழங்கும் திட்டம் நல்ல திட்டம்தான்; ஆனால் வழக்கம்போல் அரசியல் லாப நோக்கம், நிர்வாக குழப்பங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் இந்த திட்டம் நிலைகுலைந்துள்ளது.  அதோடு  பயனாளிகளை சமூக பொருளாதார கணக்கெடுப்புப் பட்டியலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் தங்களை கவனித்தவர்கள், தங்களின் கட்சிக்காரர்கள் என்றமுறையில் பயனாளிகளின் பட்டியலை தேர்வு செய்ய வேண்டுமென்று ஆளுங்கட்சி தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்கின்றனர்.

பயனாளிகளை தேர்வு செய்த பின்னர் அவர்களே பெயரை பதிவு செய்ததும் ஒர்க் ஆர்டர் (வீடுகட்டும் பணியை தொடங்குவதற்கான உத்தரவு) கொடுக்கச் சொல்கின்றனர். அந்த ஆர்டர் கொடுத்ததும் மானியத் தொகையை  பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும். ஆனால் மானியப் பணத்தை குறித்த காலத்தில் சரிவர ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்கிறார்கள். பயனாளிகள் வங்கிப் பணத்தை வைத்து வீடு கட்டும் பணியை செயல்படுத்த வேண்டும். ஆனால் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பலரும் அந்தப் பணத்தை வேறு நடவடிக்கைகளுக்கு செலவு செய்கின்றனர்.

மேலும் தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ரூபாய் 1.70 லட்சத்தை வைத்து வீடு கட்டும் பணியை தொடர முடியாத படி பெரும் திணறல் ஏற்படுகிறது. மணல் தட்டுப்பாடு பிரச்சனை இன்னும் நின்றபாடில்லை. ஒரு யூனிட் மணல் விலை ரூபாய் 36,000 வரையுள்ளது. செங்கல் விலையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. கொடிகட்டிப் பறந்த செங்கல் தொழிலில் சமீப காலமாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாக செங்கல் விற்பனை சரிந்து விட்டது. உற்பத்தியான செங்கல் விற்பனையாகாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் தட்டுப்பாடு பிரச்சனையை அம்மா சிமெண்ட் மூலம் தீர்க்கலாம் என்றாலும் அது குறித்த காலத்தில் வந்துசேருவதில்லை. இந்த பிரச்சனைகளால் 2016-17ல் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 338 வீடுகளின் கட்டுமானப் பணிகள்  தேங்கியுள்ளன.

இந்நிலையில் இந்தாண்டில் மேலும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 214 வீடுகள் கட்டப்படும் என்ற புதிய இலக்கை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடுவதால் யாருக்கு என்ன லாபம்? பயனாளிகள் தேர்வு முதல் மணல், சிமெண்ட் வரையிலான பிரச்சனைகளுக்கு அரசின் தீர்வு என்ன? அரசியலிலும் ஆட்சியிலும் ஏற்பட்டுள்ள குழப்பம் எப்போது தீரும்?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்கிடைத்தால்தான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தி இலக்கை அடையமுடியும்.
செய்தித் தொகுப்பு : ஐ.வி.நாகராஜன்

Leave A Reply