திருப்பூர், செப்.14-
அவிநாசி வட்டாரத்தில் உள்ள குளங்கள் சமீப நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நிரம்பியுள்ள சூழ்நிலையில் கரைகள் உடைந்து சேதாரம் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அவிநாசி வட்டார அனைத்துக் கட்சிகள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஏ.பழனிசாமி (திமுக), எஸ்.வெங்கடாசலம் (சிபிஎம்), கே.எம்.இசாக் (சிபிஐ), வி.கோபாலகிருஷ்ணன் (காங்.,), பி.எம்.சுப்பிரமணியம் (மதிமுக), எஸ்.பழனிசாமி (தேமுதிக), கருப்புசாமி (வி.சி.,) உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றி, திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட தீர்மானக் கடிதம் வருமாறு: கனமழை காரணமாக அவிநாசி வட்டாரத்தில் பெருவாரியான குளங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக தாமரைக்குளம், சங்கமாங்குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வந்துள்ளன. பல வருடங்களுக்குப் பிறகு தாமரைக்குளம் நிரம்பியிருக்கும் நிலையில் இன்னும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தாமரைக் குளத்தின் கரைப்பகுதி பலவீனமாக இருப்பதால் தண்ணீர் இன்னும் வரும்போது அழுத்தம் காரணமாக கரை உடையும் ஆபத்து உள்ளது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் உள்ளது. எனவே மக்கள் அச்சத்தைப் போக்கவும், தண்ணீர் வீணாகாமல் இருக்கவும் தாமரைக்குளம் கரையை பலப்படுத்த வேண்டும், அனைத்து குளங்களின் மதகுகளையும் சரி செய்ய வேண்டும், நீர்நிலை மற்றும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் சமயத்தில் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களை கண்டறிந்து மாற்று இடம் வழங்க வேண்டும். அத்துடன் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கணக்கெடுத்து உணவு, இருப்பிடம், நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலை, வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் மற்றும் கழிவுப்பொருட்களை குளத்தில் கொட்டாமல் தடுக்க வேண்டும். அவிநாசி மங்கலம் சாலையில் தாமரைக்குளத்தின் மதகு அருகே பாலம் கட்டியபோது மதகைபயன்படுத்த முடியாதபடி மண்ணைக் கொட்டி அடைத்துவிட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: