சேலம், செப்.14-
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதியை அவதூறாக பேசிய கிருஷ்ணசாமியை கண்டித்து சேலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதா மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவி அனிதா மரணத்தை இழிவுபடுத்தியும், நீட் தேர்விற்கு ஆதரவாகவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிவருகிறார். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.பாலபாரதியை, மிகவும் தரம் தாழ்ந்து கிருஷ்ணசாமி ஒருமையில் பேசினார். இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்ஒரு பகுதியாக சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம் முன்பு வியாழனன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமியை கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குகோரியும் முழங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் ராஜாத்தி, வாலிபர் சங்க முன்னாள் தலைவர் எம்.கனகராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: