*

அவர் பெயர் இராமானுஜம் . தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள். காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது.
தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.
காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார். அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.

திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம்வேண்டும் என்பதால்,சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டைமுடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம். மீண்டும் முனகிக்கொண்டே காலை நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார். லால்குடி,விருத்தாசலம் என்று சிலர் ஏறும்போதும் இந்த முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

விழுப்புரம் வந்ததும் இன்னும் நிறையபேர் டிக்கெட் வாங்கி அந்த கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள் . கால் நீட்டி படுத்திருந்த ராமனுஜம் இப்போது வேறு வழியின்றி எழுந்து உட்கார்ந்து கொண்டார். அப்போதும் மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் தாராளமாக உட்கார்ந்திருந்தார். ” இவர்களெல்லாம் ரயிலில் வரவில்லை என்று யார் அழுதார்கள்? கண்டவர்களெல்லாம் ஏறி ரயிலின் தரத்தை குறைத்துவிட்டதாகவும் அவருக்கு வருத்தம்”.

செங்கல்பட்டு வந்ததும் கூட்டம் இன்னும் அதிகமானது. தனக்கு உரிய ஒற்றை சீட்டில் அமரவேண்டிய நிலைக்கு வந்தார் ராமானுஜம். கால்நீட்டி படுத்து சொகுசாக பயணித்த தன் பயணம் தடைபட்டது அவருக்கு தீராத சோகத்தையும் , சகபயணிகள் மீது அதீத கோபத்தையும் உருவாக்கியது. ஆனால் பயணிகள் எல்லோரிடமும் டிக்கெட் வேறு இருந்ததால் அவரால் பொருமுவதை தவிர எதுவும் செய்யமுடியவில்லை.

பக்கத்தில் அவருடைய பொருமலை பொறுமையாக கேட்டுகொண்டிருந்த ராமசாமி சொன்னார், உங்களுக்குரிய இடத்தை யாரும் இங்கு கேட்கவே இல்லை நண்பா. இங்கு அவரவர்கள் தங்களுக்கு உரிய இடத்தைதான் தேடி வருகிறார்கள் என்று எவ்வளவோ எடுத்து சொன்னார். ராமனுஜம் கேட்டபாடில்லை.

கூட்டம் இன்னும் அதிகமானது. இப்போது பெண்களுக்கு சிலர் தங்கள் இடங்களை கொடுக்கவேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகத் தொடங்கினார்கள். சிலர் மாற்றுதிறனாளிகளுக்கும் இடம் கொடுக்கவேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகிக்கொண்டே இருந்தார்கள்.

ரயில் சென்னை வந்து சேர்ந்தது. எல்லோரும் இறங்கி தங்கள் வீடுகளுக்கு போனார்கள். ரயிலின் இலக்கு கும்பகோணத்திற்கு மாற்றப்படுகிறது .

தற்போதும் டிக்கெட் வாங்கி காத்திருக்கும் பயணிகளை ராமனுஜம் கோபமாகவே பார்த்துக்கொண்டு போகிறார்.

ராமானுஜத்திடம் யாரேனும் சொல்லவேண்டும். நீங்கள் சொகுசாக இதுவரை பயணித்தது மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் என்று.

Leave A Reply