கதவை திறந்ததும் நான்கு பெண்களும் சேர்ந்து தாசன் மீது பாய்ந்தார்கள்.

“யார் நீங்க”என்று கத்தினான் தாசன்

ஒருத்தி அவன் கால்களை பிடித்து இழுத்து மல்லாக்க தள்ளி விட்டு அவன் முகத்துக்கு நேராக விரல்களை சுட்டி கேட்டாள் “ஏண்டா காடுகளை எல்லாம் அழிச்சப்ப நீ ஏதாவது வாயத்தொறந்து பேசுனியா”

இன்னொருத்தி அவனை தரதரவென்று இழுத்து தூக்கி சுழற்றி சுவரோடு சேர்த்து அவன் நெஞ்சை அழுத்தியபடி சொன்னாள் “அவனவன் ஆத்து மணல்ல அள்ளி ஆட்டையை போட்டப்போ நீ எதாவது பேசிருக்கியா”

இன்னொருத்தி அவனை பிடித்து தன் கைகளால் தூக்கி அந்தரத்தில் மிதக்க விட்டபடி அண்ணாந்து பார்த்து கத்தினாள் “விலங்குகள் வாழவேண்டிய இடத்தில வீட்ட கட்டிட்டு மனிதர்கள் வாழும் ஏரியாவில் மிருகங்கள் அட்டகாசம்னு சொன்னப்ப நீ அதப்பத்தி ஏதாவது சொல்லி இருக்கியா” என்றபடி கீழே வீசினாள்

நான்காமவள் அவன் வாய்மீது தன் காலால் ஓங்கி ஒரு உதை விட்டபடி “அணை என்கிற பெயர்களால் ஆறுகளை அதன் இயல்பிலிருந்து துண்டித்து அரசியல் சிறை வைத்தபோது நீ வாயத்தொறந்தியா”

கீழே கிடந்த தாசன் மலங்க மலங்க விழித்த படி கேட்டான் “நீங்கெல்லாம் யாரு”

அவனின் லோ ஆங்கிள் பார்வையிலிருந்து பார்க்கும்போது அவர்கள் பிரம்மாண்டமாக தெரிந்தார்கள்.

“நாங்கள் கங்கா, யமுனா, கோதாவரி, காவிரி”என்றார்கள் ஒரே குரலில்

”என்னா அடி.”என்று அழுதவன் ”இப்போ எதுக்கு வந்தீங்க”என்றான்

ஒரு சேர சொன்னார்கள் “எப்பவுமே எதுக்குமே வாயத்தொறக்காத நீ, நேத்து எங்களுக்கு கொடுத்தியே ஒரு மிஸ்டுகால்”

Santhosh Narayanan

Leave A Reply