நீலகிரி;
”உங்களையெல்லாம் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.. ஏன் மீண்டும் மீண்டும் வந்து எங்களையெல்லாம் தொந்தரவு செய்கிறீர்கள்.. உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.. போய் விடுங்கள்.”

-மாவட்ட ஆட்சியரின் இத்தகைய அதிகாரக் குரலைக் கேட்டு அதிர்ந்து போய் இறுக்கமான

முகத்தோடு வெளியே வருகிறார்கள் நான்கு தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த இருளர் பழங்குடி மக்கள்…

இந்தியா தனது 70 சுதந்திர ஆண்டுகளை நிறைவு செய்த வேளையில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் கிராம பழங்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம் இது!

“எங்க பொண்ணு கலாவிற்கு பிரசவம் ஆகி எட்டு நாள் தாங்க ஆச்சு. பச்சக் குழந்தைய கையில் வெச்சிருந்த அந்தப் பொண்ண வெளியே தள்ளிட்டு குடிசைய இடிச்சு போட்டுட்டாங்க… இனி ஏந்தான் உயிரோட வாழறோம்னு அந்த நிமிஷத்தில அவமானத்தில் குறுகி போய்ட்டோங்க…”
-கண்ணீரோடு குமுறுகிறார் கமலா.

“உங்க நிலப்பிரச்சனை சம்பந்தமா உங்களோட பேச கலெக்டரம்மா வரச்சொன்னாங்கன்னு கூப்பிட்டாங்க.. சரின்னு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில ஊருக்குள்ள இருந்து போன் வந்துச்சு.. அம்மா நம்ம வீட்டையெல்லாம் நிறைய போலீஸ்காரங்களும், அதிகாரிகளும் வந்து இடிச்சிக்கிட்டுருக்காங்கனு… பதறிப் போய் திரும்பி வந்தா எங்க குடிசையெல்லாம் மண்ணோட மண்ணா கிடக்குதுங்க.. இப்படியுமா ஒரு மாவட்ட நிர்வாகம் ஏழை பழங்குடி மக்களை ஏமாத்துவாங்க…” -ஆதங்கத்தோடு கேட்கிறார் சரோஜா. இன்னும் இன்னும் இதுபோன்ற துயரக்கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் வாழைத்தோட்ட இருளர் பழங்குடி மக்கள்..

என்னதான் பிரச்சனை… இதோ ஒரு பிளாஷ்பேக்…
பூசாரி பண்டன் என்கிற மூத்த இருளர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த விவசாயி 1940ஆம் ஆண்டுகளில் துவங்கி இப்பகுதியில் சுமார் 17 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

அந்த நிலத்தில் தான் தற்போது நான்காவது தலைமுறையாக 162 பேர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த விவசாய நிலத்தை 1982ஆம் ஆண்டில் பழங்குடி மக்களிடமிருந்து தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கால்நடைகளுக்கான புல் வளர்ப்புக்காக பயன்படுத்திக் கொள்ள கேட்கிறது. அதற்கு ஈடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசுப் பணி மற்றும் கால்நடைகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்து நிலத்தைப் பெற்றுக் கொள்கிறது.

ஆனால் உறுதி அளிக்கப்பட்டபடி பழங்குடி மக்களுக்கு அரசு வேலையும், கால்நடைகளும் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சில ஆண்டுகளிலேயே புல் வளர்ப்பையும் ஆவின் நிறுவனம் கைவிட்டு விட, அந்த நிலம் யாராலும் பயன்படுத்தப்படாமலேயே கிடக்கிறது.

இந்த நேரத்தில் தான் அந்த நிலத்திற்கு அருகிலேயே ஒரு தனியார் கல்வி நிலையம் துவங்கி செயல்பட ஆரம்பிக்கிறது. பணம் படைத்த அந்த கல்வி நிறுவனத்தின் கண்ணில்பட்டது பயன்படுத்தப்படாமல் இருக்கும் 17 ஏக்கர் நிலம்.நிலத்தைக் கைப்பற்ற தந்திரமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன.

இதை உணர்ந்து கொண்ட பழங்குடி மக்கள், நில அபகரிப்பைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த நிலத்தில் குடிசைகளை அமைத்து வாழ்கிறார்கள்.திடீர் திருப்பமாக அதே இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இருவர் மேற்படி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை (?!) அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்கிறார்கள்… வேக வேகமாக காட்சிகள் அரங்கேறுகின்றன…

இந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி,குடிசைகள் போட்டு ஆக்கிரமித்திருப்பதாக புகைப்படங்கள் உயர்நீதிமன்றத்தில் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்படுகிறது. ஒரே நாள் இடைவெளியில் ஆகஸ்ட் 4 அன்றே குடிசைகளை இடித்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. தீர்ப்பு வெளியான நான்கே நாட்களில் ஆகஸ்ட் 10ஆம் தேதியே அரசு அதிகாரிகள் காவல்துறை புடை சூழ வந்து தனது கடமையை (?) செவ்வனே நிறைவேற்றி குடிசைகளை இடித்து தள்ளுகிறார்கள்.
இது தான் சம்பவம்.

இந்த நிலவெளியேற்றத்தைக் கண்டித்தும், பழங்குடி மக்களின் நில உரிமையை வலியுறுத்தியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் உடனடியாக களத்தில் இறங்கியது. அச்சத்தோடு இருந்த பழங்குடி மக்களின் கிராமங்களில் ஊர் கூட்டங்கள் நடைபெற்றன. நிலம் நம்முடையதே; ஒரு போதும் அதை விட்டுக் கொடுக்க முடியாது; நிலத்தை மீட்க தொடர் போராட்டங்களுக்கு திட்டமிடுவோம் என முடிவு செய்யப்பட்டு முதல் கட்டப் போராட்டம் திட்டமிடப்பட்டது.

வழக்கம் போல தனது கடமையை ( ! ) செய்ய முன்வந்த காவல்துறை, அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி போராட்டம் துவங்கியுள்ளது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு, மாவட்டச் செயலாளர் கே.ராஜ்குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் அடையாள குட்டன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஏ.வினோத்குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற குழுவின் கள ஆய்வில் உண்மைகள் கண்டறியப்பட்டதோடு, போராட்டத்தில் நில மீட்பை வலியுறுத்தியும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

செங்கொடிகளைக் கைகளில் ஏந்திய இருளர் பழங்குடி மக்கள் போராட்டக் களத்தில் சூளுரைத்து சென்றிருக்கிறார்கள். எங்கள் மூதாதையர்களின் நிலத்தை மட்டுமல்ல; நிலத்தின் ஒரு பிடி மண்ணைக் கூட யாரும் அபகரிக்க விடமாட்டோம் என!

மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, கருப்பு தீபாவளி, வெளியேற்றப்பட்ட இடத்தில் குடிசைகள் அமைப்பது என அடுத்தடுத்த போராட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
இருள் சூழ்ந்த இருளர் பழங்குடி மக்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்றப்படும் செங்கொடியின் துணையோடு!
-ஆர்.பத்ரி

Leave A Reply

%d bloggers like this: